| ADDED : மார் 13, 2024 01:57 AM
தாளவாடி:தாளவாடிமலையில், ஜீரகள்ளி வனச்சரகத்துக்கு உட்பட்ட திகினாரை மலை கிராமத்தை சேர்ந்தவர் மாக்கையா, 65; இவருக்கு சொந்தமான நிலத்தில் வாழை சாகுபடி செய்துள்ளார். இரவில் யானைகள் வாழையை சேதம் செய்வதால், இரவில் காவல் பணிக்கு செல்வது வழக்கம். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் சென்றார். அதிகாலையில் ஒரு யானை தோட்டத்தில் புகுந்தது. டார்ச் லைட் அடித்து விரட்ட முயன்றவரை, யானை மிதித்து கொன்றது. அக்கம்பக்கத்தினர் தகவலின்படி வனத்துறையினர் மற்றும் தாளவாடி போலீசார், சத்தி டி.எஸ்.பி., சரவணன் சென்றனர். பலியான விவசாயிக்கு இழப்பீடு கேட்டு, உடலை எடுக்க விடாமல் உறவினர்கள் வாக்குவாதம் செய்து, போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆசனுார் வன அதிகாரி சுதாகர் சென்றார்.மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், மாக்கையா மனைவி மணியம்மாளிடம், ௫ லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கினார். இதன் பிறகே மதியம், 3:௦௦ மணியளவில் போராட்டத்தை மக்கள் கைவிட்டனர். விவசாயி உடலை எடுக்க விடாமல், 8 மணி நேரம் நடந்த போராட்டத்தால், அப்பகுதியே பரபரப்பாக காணப்பட்டது.