கொடுமுடியில் ஆசாமி கொலை திண்டுக்கல் வாலிபருக்கு காப்பு
ஈரோடு:கொடுமுடி பஸ் ஸ்டாண்ட் அருகில், கடந்த, 9ம் தேதி காலை, இருவரிடையே வாக்குவாதம், கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதில் அடையாளம் தெரியாத, 55 வயது மதிக்கதக்க ஆண் தலையில் பலத்த காயமடைந்தார். கொடுமுடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக திருச்சி மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு நேற்று காலை இறந்தார். பொது இடத்தில் தகராறு செய்து கொண்டதாக கொடுமுடி போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். ஆசாமி இறந்ததால் கொலை வழக்காக மாற்றியுள்ளனர்.இது தொடர்பாக திண்டுக்கல் மாவட்டம் முனிசிபல் காலனியை சேர்ந்த சங்கர், 48, என்பவரை, போலீசார் கைது செய்துள்ளனர். கொடுமுடி கடைவீதியில் வேலை செய்து வரும் தம்பியுடன் சங்கர் தங்கியிருந்தது தெரிய வந்துள்ளது. கொலைக்கான நோக்கம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.