ஈரோடு: சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் (எம்.எஸ்.எம்.இ.,) வணிக கடன்களை, 45 நாட்களுக்கு மேல் செலுத்தாமல் இருந்தால், அதை வருமானமாக கருதி, வருமான வரி செலுத்த மாறுதல் செய்துள்ளனர். இந்த சட்டத் திருத்தம் வரும் மார்ச், 31ல் அமலாகிறது. ஜவுளி தொழிலில் பிராசசிங், டையிங், பிரிண்டிங், ஸ்டிச்சிங் என பல நிலைகளை கடந்து விற்பனை நடக்கிறது. அதற்கேற்ப, 45 நாட்கள் அல்லது அதற்கு மேலான நாட்களில் கடன் தொகையை நேர் செய்வர்.புதிய சட்ட திருத்தத்தால், வருமான வரி செலுத்தும் நிலை ஏற்படும். இதனால் தொழில் கடுமையாக பாதிக்கும். சட்ட திருத்தத்தை திரும்ப பெற வேண்டும். அல்லது அடுத்தாண்டு மார்ச் வரை ஒத்தி வைக்க வலியுறுத்தி, ஈரோடு கிளாத் மெர்ச்சன்ட்ஸ் அசோசியேசன் வரும், 28ம் தேதி கடையடைப்பு அறிவித்துள்ளது. இவர்களுக்கு விசைத்தறி உற்பத்தியாளர்கள் சங்கம் ஆதரவு அளித்துள்ளது.இதுகுறித்து தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு அமைப்பு செயலாளர் கந்தவேல் கூறியதாவது: இச்சட்ட திருத்தத்தால் ஜவுளி சார்ந்த அனைத்து தொழில்களும் பாதிக்கும். அந்த அடிப்படையில் ஈரோடு மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்ட விசைத்தறியாளர் கடையடைப்பில் பங்கேற்கிறோம். இதன்படி ஈரோடு பகுதியில், 40,000 விசைத்தறி, திருச்செங்கோடு பகுதியில், 10,000க்கும் மேற்பட்ட விசைத்தறிகள், 28ம் தேதி காலை, 8:00 மணி முதல் இரவு, 8:00 மணி வரை இயங்காது. இதனால் ஈரோடு பகுதியில் மட்டும், 30 லட்சம் மீட்டருக்கு மேல் துணி உற்பத்தி தடைபடும். இவ்வாறு கூறினார்.