சிவன்மலை கோவிலில் கந்த சஷ்டி விழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு
சிவன்மலை கோவிலில் கந்த சஷ்டி விழாஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடுகாங்கேயம், நவ. 8-காங்கேயம் அருகே சிவன்மலையில் உள்ள சுப்ரமணிசாமி கோவிலின் நடப்பாண்டு கந்தசஷ்டி விழாவில், முக்கிய நிகழ்வான சூரசம்ஹார விழா நேற்று நடந்தது. விழாவையொட்டி மலை அடிவாரத்தில் உள்ள நஞ்சுண்டேஸ்வரர் சுவாமி திருக்கோவிலுக்கு, சுப்ரமணிய சுவாமி எழுந்தருளுளினார். சூரசம்ஹாரவிழா நேற்று மாலை துவங்கியது. சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இரவு, 7:50 மணியளவில் முருகப்பெருமான் பல்லக்கில் போருக்கு புறப்பட்டார். அடிவாரத்தில் உள்ள நான்கு வீதிகளிலும் போரிட்டு கஜமுகாசூரன், சிங்கமுகாசூரன், பானுகோபன், தாரகாசூரன் தலையை கொய்தார். அப்போது கூடியிருந்த ஏராளமான பக்தர்கள், அரோகரா கோஷமிட்டு வழிபட்டனர். இன்று மாலை சுவாமி திருக்கல்யாண உற்சவம், நாளை மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. இதன் பிறகு சுவாமி திருமலைக்கு எழுந்தருளுகிறார். * தாராபுரம், புதுக்காவல் நிலைய வீதி சுப்பிரமணியசாமி கோவிலில், கடந்த ஆறு நாட்களாக கந்த சஷ்டி விழா நடந்தது. இந்த நாட்களில் கோவிலில் விசேஷ பூஜை, அலங்காரம் மற்றும் ஆராதனை நடந்தது. விழா நிறைவாக நேற்றிரவு, 7.00 மணியளவில் சூரசம்ஹாரம் நடந்தது.அலங்கியம் ரோடு, பெரிய கடைவீதி, டி.எஸ்.கார்னர் மற்றும் சோளக்கடை வீதி வழியாக சென்ற ஊர்வலத்தில், சூரபத்மனை, சுப்பிரமணியர் வதம் செய்தார். நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கண்டு களித்தனர்.