கொடிவேரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
கோபி: மாட்டு பொங்கல் விடுமுறை நாளில், கொடிவேரி தடுப்பணையில் உள்ள அருவியில், ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்தனர்.ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர், கோபி அருகே கொடிவேரி தடுப்பணை வழியாக, பவானி ஆற்றில் அருவியாக கொட்டுகிறது. குளிக்கும் வசதி எளிது என்பதால், அங்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிகின்றனர். மாட்டு பொங்கல் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை என்பதால், நேற்று காலை, 8:30 மணி முதல், சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்தது. ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள், அருவியில் ஆனந்தமாக நேற்று குளித்து சென்றனர். இன்னும் சிலர் பூங்காவில் பொழுதை கழித்தும், பரிசல் பயணமும் சென்றனர், மேலும், அங்கு சுடச்சுட விற்பனையான மீன் ரோஸ்ட்டுகளை வாங்கி சுவைத்து, அவரவர் சொந்த ஊர் திரும்பினர்.