மொடக்குறிச்சி, சென்னிமலையில் நகை பறித்த இருவர் கைது
ஈரோடு: மொடக்குறிச்சி, வேலன்காட்டுபுதுார், வேலம்பாளையத்தை சேர்ந்த தினேஷ்குமார் மனைவி ஷோபனா, 35; இரு தினங்களுக்கு முன் காலையில் ஸ்கூட்டரில், மொடக்குறிச்சி-சேமூர் பாதையில் சென்றபோது, ஆலுாத்துபாளையம் என்ற இடத்தில், பைக்கில் வந்த ஆசாமி, ஷோபனா அணிந்திருந்த ஒரு பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றார். இதுகுறித்த புகாரின்படி மொடக்குறிச்சி போலீசார் விசாரித்தனர். தேனி, ஆண்டிபட்டி பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி நந்தகோபால், 30, என்பவரை போலீசார் கைது செய்தனர். கணபதிபாளையம் தோட்டக்காடு பகுதியில் வசிக்கிறார். ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்துள்ளார். கடன் கட்ட முடியாத நிலையில் நகை பறிப்பில் ஈடுபட்டுள்ளார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மாவட்ட சிறையில் அடைத்தனர். * சென்னிமலையை அடுத்த முருங்கத்தொழுவு காலனியை சேர்ந்த ரமேஷ் மனைவி கோமதி, 35; தற்போது வெள்ளோட்டில் உள்ள சி.எஸ்.ஐ., காலனியில் வசிக்கின்றனர். முருங்கத்தொழுவு கருப்பராயன் கோவில் அருகே நேற்று முன்தினம் மாலை கோமதி ஸ்கூட்டியில் சென்றார். அப்போது பைக்கில் பின் தொடர்ந்து வந்த ஆசாமி அவர் அணிந்திருந்த இரண்டரை பவுன் தங்கச்சங்கிலியை பறித்து சென்றான். புகாரின்படி சென்னிமலை போலீசார் விசாரித்தனர். இந்நிலையில் சென்னிமலை யூனியன் சிறுக்களஞ்சி ஊராட்சி, கிழக்கு தோட்டம் புதுாரை சேர்ந்த மாரிமுத்து மகன் கவிதேவாவை, போலீசார் கைது செய்தனர். நகையை பறிமுதல் செய்து, பெருந்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தி மாவட்ட சிறையில் அடைத்தனர்.