தேர்தல் விதிகளை மீறி சர்ச்சுகளில் நா.த.க., பிரசாரம்
ஈரோடு: ஈரோட்டில் தேர்தல் விதிமுறைகளை மீறி சர்ச்சுக்குள் நாம் தமிழர் கட்சியினருடன் சென்று வேட்பாளர் பிரசாரத்தில் ஈடுபட்டார்.ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி போட்டியிடுகிறார். வழிபாட்டு தலங்களுக்குள் சென்று வேட்பாளரோ, அரசியல் கட்சியினரோ தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட கூடாது என்று தேர்தல் கமிஷன் விதிமுறை வகுத்துள்ளது. ஆனால், நேற்று காலை ஈரோடு ஸ்டேட் பாங்க் சாலையில் உள்ள புனித அமல அன்னை ஆலயத்துக்குள் கட்சியினர், கொடியுடன் சென்றார். கிறிஸ்தவர்கள் ஜெபம் செய்யும் அரங்கிற்குள் கட்சியினர் படை சூழ பதாகைகள், நோட்டீகளுடன் உள்ளே சென்றார். ஆலய வளாகத்தில் கட்சியினர் ஓட்டு சேகரித்தனர். சிறிது நேரம் ஆலயத்துக்குள் கட்சியினருடன் வேட்பாளர் நின்று இருந்தார். பாதிரியார் வர தாமதமாகும் என்பதால் அங்கிருந்து கிளம்பி சென்றார்.அதன் பின் ஈரோடு எம்.எஸ்.சாலையில் உள்ள பிரப் ஆலயத்துக்கு சென்றார். அங்கு ஜெபம் செய்யும் இடத்துக்கு சென்று பாதிரியாரிடம் தேர்தல் பிரசார நோட்டீசை வழங்கினார். பின்னர் பாதிரியாரிடம் ஆசி பெற்றார். தேர்தல் விதிமுறைகளை மீறி சர்ச்சுக்குள் சென்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டது, தேர்தல் அதிகாரிகளின் கவனத்துக்கு போலீசார் கொண்டு சென்றுள்ளனர்.