கீழ்பவானி பாசனத்திற்கு நீர் திறப்பு: 2,200 கன அடியாக அதிகரிப்பு
புன்செய் புளியம்பட்டி : பவானிசாகர் அணையில் இருந்து, கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு 2,200 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையில் இருந்து, ஒரு லட்சத்து, 3,500 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில், கீழ்பவானி வாய்க்காலில் முதல்போக நன்செய் பாசனத்துக்கு கடந்த, 15 முதல் தண்ணீர் திறக்கப்பட்டது. பெருந்துறை அருகே நல்லாம்பட்டி என்ற இடத்தில், நீர் கசிவு ஏற்பட்டதால், பாசனத்துக்காக திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டு சீரமைப்பு பணிகள் முடிந்து, மூன்று நாட்கள் கழித்து கீழ்பவானி வாய்க்காலில் மீண்டும் நீர் திறக்கப்பட்டது. முதற்கட்டமாக, 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு, நீர் திறப்பு படிப்படியாக அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. நேற்று முன்தினம் நீர் திறப்பு, 1,800 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று கீழ்பவானி வாய்க்காலில் நீர் திறப்பு, 2,200 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. நேற்றைய நிலவரப்படி, அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு, 2,237 கன அடியாக இருந்தது. அணையின் நீர்மட்டம், 97.13 அடி, நீர் இருப்பு, 26.5 டி.எம்.சி., யாக இருந்தது.அரக்கன் கோட்டை-தடப்பள்ளி பாசனத்திற்கு, 650 கன அடி தண்ணீர், காளிங்கராயன் பாசனத்திற்கு, 200 கன அடி நீர் மற்றும் குடிநீருக்காக, 100 கன அடி என மொத்தம், 3,150 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.