வாய்க்காலில் நீர் திறப்பு நிறுத்தம்
புன்செய்புளியம்பட்டி, டிச. 13-பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்துக்கு, 2,300 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டிருந்தது. நேற்று காலை முதல் நீர் திறப்பு முற்றிலும் நிறுத்தப்பட்டது. அதே சமயம் அரக்கன்கோட்டை தடப்பள்ளி பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக மட்டும், அணையில் இருந்து, 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. மாலை நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து, 2,268 கனஅடியாக இருந்தது. நீர்மட்டம், 98.90 அடி, நீர் இருப்பு, 27.8 டி.எம்.சி.,யாக இருந்தது. பாசன பகுதிகளில் பரவலாக மழை பெய்வதால் கீழ்பவானி வாய்க்கால் பாசனத்துக்கு தண்ணீர் முற்றிலும் நிறுத்தப்பட்டதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.