| ADDED : ஜூன் 26, 2024 02:29 AM
மூங்கில்துறைப்பட்டு, : முன்அறிவிப்பு இன்றி சாலை விரிவாக்கப் பணிக்காக வீடுகளை இடித்ததால் பொக்கலையன் இயந்திரத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் மூங்கில்துறைப்பட்டில் பரபரப்பு ஏற்பட்டது.தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் திருவண்ணாமலையிலிருந்து கள்ளக் குறிச்சி வரை நான்கு வழி சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. தற்போது மூங்கில்துறைப்பட்டில் சாலை அகலப்படுத்தும் பணி வேகமாக நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக அண்ணாநகர் பகுதியில் உள்ள வீடுகளை எந்த முன் அறிவிப்பு இல்லாமல் இடிப்பதால் நேற்று பாதிக்கப்பட்ட பொதுமக்கள் திரண்டு பொக்கலையன் இயந்திரத்தை முற்றுகையிட்டனர்.தகவல் அறிந்த வி.ஏ.ஓ., முருகன், சப் இன்ஸ்பெக்டர் சிவன்யா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்தை நடத்தினர். அப்பொழுது அவர்கள் தொகுதி எம்.எல்.ஏ., வசந்தம் கார்த்திகேயன், பாதிக்கப்படும் நபர்களுக்கு வீடுகள் கட்டி கொடுத்தப்பின் வீடுகள் அகற்றப்படும் என தெரிவித்துள்ளார். ஆனால் அந்த வாக்குறுதி பொய்யாகப் போனது என ஆதங்கத்துடன் கூறினர்.அப்போது ஒன்றிய துணைச் சேர்மன் அஞ்சலை கோவிந்தராஜ் தி.மு.க., மாவட்ட மாணவரணி அமைப்பாளர் விஜய் ஆனந்த் ஆகியோர் நேரில் வந்து சாலை அகலப்படுத்தும் பணியை தற்காலிகமாக நிறுத்தி வைத்தனர். பாதிக்கப்படும் குடும்பத்தினர்களுக்கு வீடுகள் வழங்கிய பிறகு வீடுகள் இடிக்கவேண்டும். அதுவரை வீடுகளை இடிக்க கூடாது என்று திட்டவட்டமாக பேசிய பின் தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மற்றும் ஒப்பந்த நிறுவன அதிகாரிகள் பணியை நிறுத்திவிட்டு சென்றனர்.