| ADDED : ஏப் 04, 2024 11:43 PM
கள்ளக்குறிச்சியில் தி.மு.க.,வினரின் உள்ளடி வேலையால் கட்சி கரையேறுமா என்ற கலக்கத்தில் தலைமை அதிருப்தியில் உள்ளது.கள்ளக்குறிச்சி மாவட்ட பொறுப்பு அமைச்சர் எ.வாவேலு. இவர் தொகுதி பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட பிறகு மாவட்டச் செயலாளராக இருந்த வசந்தம் கார்த்திகேயன் கை ஓங்கியது. ஒரு கட்டத்தில் இவர்தான் மாவட்ட அமைச்சர் என்ற அளவில் தனது அதிகாரத்தை அளவுக்கு அதிகமாக பயன்படுத்த தொடங்கினார். இதனால் சீனியர்களான எம்.எல்.ஏ., கள் உதயசூரியன், மணிகண்ணன் உள்ளிட்டவர்கள் மனம் வெதும்பத் துவங்கினர். இவரை மீறி மாவட்டம் இல்லை என்ற நிலை உருவானது.வசந்தத்திற்கு இத்தனை பெரிய பொறுப்பை கொடுத்து அழகு பார்த்த எ.வ.வேலுவுக்கு சுயநல கணக்குதான் காரணம் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள். மகன் கம்பனை கள்ளக்குறிச்சி எம்.பி., ஆக்கி அழகு பார்க்க வேண்டும் என்பதுதான் அது. இதற்காக சிட்டிங் எம்.பி.,யான கௌதம சிகாமணியை நுழையவிடாமல் வசந்தம் கார்த்திகேயனை வைத்து காயை நகர்த்தி வெற்றியும் பெற்றார்.அவரும் இதை புரிந்து கொண்டு மாவட்டத்தில் அத்தனை அதிகாரிகளையும் கையில் போட்டுக் கொண்டு தன்னை பலப்படுத்திக் கொண்டார். ஒரு கட்டத்தில் வசந்தம் கார்த்திகேயன் சொல்வதை தான் அமைச்சர் மட்டுமல்ல அவர் துறையை சார்ந்த அதிகாரிகளும் கேட்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.இதன் காரணமாக வசந்தத்தின் காட்டில் வாசம் வீசியது. ஒரு கட்டத்தில் வசந்தம், புயலாக மாறியது. ரிஷிவந்தியம் தொகுதியில் மட்டும் 15க் கும் மேற்பட்ட கிராம சாலைகள் நெடுஞ்சாலை துறைக்கு மாற்றப்பட்டது. இப்படி வேலுக்கே தெரியாமல் பல கோடி ரூபாய்க்கு பணிகள் மேற்கொள்ள ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.தனக்கே தெரியாமல் தன் துறையில் வசந்தம் கோலோச்சியதை அறிந்தும் வேலுவால் வாய்திறக்க முடியவில்லை காரணம் மகனை எம்.பி., ஆக்க வேண்டும் என்ற ஆசைதான்.தனது மகனுக்கு சீட்டு இல்லை என அறிந்ததும் கொதித்துப்போன வேலு வசந்தத்தை சிக்க வைக்க திட்டம் தீட்டியதாக கூறப்படுகிறது. அதற்காக கடைசி நேரத்தில் வேலு தலையிட்டு வசந்தத்தின் ஆதரவாளரான கலையரசனுக்கு பணப்பலம் இல்லாதவர் என்று தெரிந்தே சீட்டு வாங்கி கொடுத்து அதில் வெற்றியும் பெற்றுள்ளார்.செலவு முழுவதையும் அமைச்சர் வேலு கவனித்துக் கொள்வார் என்று இருந்த வசந்தத்திற்கு தற்பொழுது தலைசுற்ற ஆரம்பித்துவிட்டது. இதன் காரணமாக மலையையே முழுங்கி செலவு செய்து கொண்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.தற்போதைய தொகுதி நிலவரம் தி.மு.க., விற்கு வீக்காக இருப்பதாகவும், இதற்குக் காரணம் மாவட்டத்தில் வசந்தத்தின் அதிகார துஷ்பிரயோகம் என்ற ரகசியம் கட்சித் தலைமைக்கு ரிப்போர்ட்டாக சென்றுள்ளது.தன்னையே ஏமாற்றிய வசந்தத்திற்கு வேலு வைத்த செக்கு தான் இது என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.எதிர்கோஷ்டிகளாக இருக்கும் அமைச்சர் பொன்முடியும், சேலம் மாவட்ட செயலாளர் சிவலிங்கமும் வேடிக்கை பார்த்து குளிர்காய்கின்றனர்.தனது பரிந்துரையால் தேர்வு செய்யப்பட்ட வேட்பாளர் தோற்பதை வேலுவால் ஏற்றுக்கொள்ள முடியாமல் கடைசி கட்டத்தில் பசையை இறக்க முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. எது எப்படியோ கள்ளக்குறிச்சி சிக்கலில் சிக்கிக் கொண்டிருக்கிறது என்ற உளவுத்துறையின் தகவல் தி.மு.க., தலைமைக்கு பேரிடியாக விழுந்திருக்கிறது.