| ADDED : ஜூலை 14, 2024 11:32 PM
தியாகதுருகம்: தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யாததால், நீர்நிலைகள் வறண்டு வருகின்றன. இதனால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த 2015ம் ஆண்டுக்கு பிறகு எதிர்பார்த்த அளவு தென்மேற்கு பருவமழை பெய்யவில்லை. பருவ நிலையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தால் எதிர்பார்த்த தருணத்தில் மழை பெய்யாமல் கடும் வெப்பம் நிலவுகிறது.கடந்த ஆண்டு பருவமழை ஏமாற்றியதால் நீர்வரத்து கிடைக்காமல் நீர்நிலைகள் நிரம்பவில்லை. இதன் காரணமாக கோடையில் ஏரி, குளங்கள் அனைத்தும் முற்றிலும் வறண்டன.வழக்கமாக ஜூன் மாதத்தின் முதல் வாரத்தில் துவங்க வேண்டிய தென்மேற்கு பருவமழை சற்று தாமதமாக துவங்கிய போதிலும் இதுவரை நீர் நிலைகளுக்கு தண்ணீர் வரத்து கிடைக்கும் வகையில் கனமழை பெய்யவில்லை.நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததால், கிணற்று நீர் பாசனமும் கடும் சரிவை சந்தித்துள்ளது. இதனால் ஆண்டு பயிரான கரும்பை காப்பாற்ற முடியாமல் விவசாயிகள் திண்டாடி வருகின்றனர்.கடந்தாண்டு மே மாதத்தில் பெய்த மழையால் கோமுகி மற்றும் மணிமுக்தா ஆகிய இரு அணைகள் நிரம்பின. அதன் பிறகும் எதிர்பார்த்த அளவு மழை பெய்யவில்லை. நீர்வளம் குறைந்ததால் மாவட்டத்தில் அதிக பரப்பில் பயிரிடப்படும் நெல் சாகுபடி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யாத காரணத்தால் பிற பயிர்களின் சாகுபடி துவக்க முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். மானாவாரி பயிராக சாகுபடி செய்யப்பட்டுள்ள மக்காச்சோளம், வேர்க்கடலை, கம்பு உள்ளிட்ட பயிர்கள் காய்கின்றன.பருவமழை கைகொடுத்தால் மட்டுமே ஆடிப்பட்டத்தில் பயிர் சாகுபடி மேற்கொள்ள முடியும். கடந்த ஆண்டு போல் பருவ மழை ஏமாற்றினால் மாவட்டத்தில் விவசாயம் கடும் பாதிப்பை ஏற்படுத்தி விவசாயிகளின் ஜீவாதாரம் பாதிக்கப்படும்.வழக்கமாக தென்மேற்கு பருவமழை 40 சதவீதம் வடகிழக்கு பருவமழை 60 சதவீதம் பெய்து மாவட்டத்தில் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும். ஆனால் இந்த ஆண்டு, கோடை மழையும் பெய்யவில்லை. அதைத்தொடர்ந்து தென்மேற்குப் பருவமழையும் ஏமாற்றுவதால் மாவட்டத்தில் வறட்சி அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.