உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / விடுதியில் தங்கி பயில மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்

விடுதியில் தங்கி பயில மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் வகுப்பினை சேர்ந்த பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகள் விடுதிகளில் தங்கி பயில விண்ணப்பிக்கலாம்.கலெக்டர் ஷ்ரவன்குமார் செய்திக்குறிப்பு:கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் மாணவ, மாணவிகளுக்காக 23 பள்ளி விடுதிகள் உள்ளன. 4 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள் பள்ளி விடுதியில் சேரலாம். அதேபோல், 4 கல்லுாரி விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, ஐ.டி.ஐ., மற்றும் பாலிடெக்னிக் படிக்கும் மாணவ, மாணவிகளும் சேரலாம்.விடுதியில் தங்கும் மாணவ, மாணவிகளுக்கு 3 வேளையும் உணவு வழங்கப்படும். அதில், 10ம் வகுப்பு படிப்பவர்களுக்கு 4 இணை சீருடைகளும், 10 மற்றும் 12ம் வகுப்பு படிப்பவர்களுக்கு சிறப்பு வழிக்காட்டி, வினா வங்கி நுால் மற்றும் பாய் ஆகியவையும் வழங்கப்படும். கல்லுாரி விடுதியில் முதலாமாண்டு படிப்பவர்களுக்கு ஜமக்காளம் வழங்கப்படுகிறது.பெற்றோர் மற்றும் பாதுகாவலரின் ஆண்டு வருமானம் 2 லட்சம் ரூபாய்க்கும் மிகாமல் இருப்பவர்களின் பிள்ளைகள் விடுதியில் சேர விண்ணப்பிக்கலாம். மாணவர்கள் தங்களது வீட்டிலிருந்து, படிக்கும் கல்வி நிலையத்தின் தொலைவு 8 கி.மீ., துாரத்திற்கு மேல் இருக்க வேண்டும். மாணவிகளுக்கு துாரம் பொருந்தாது.தகுதி வாய்ந்த மாணவ, மாணவிகள் சம்மந்தப்பட்ட விடுதி காப்பாளர் அல்லது கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பத்தை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.பூர்த்தி செய்த விண்ணப்பத்தை விடுதி காப்பாளர் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில், பள்ளி மாணவர்கள் வரும் 14ம் தேதி வரையிலும், கல்லுாரி மாணவர்கள் ஜூலை 15ம் வரையிலும் சமர்ப்பிக்கலாம்.விண்ணப்பிக்கும் போது ஜாதி மற்றும் வருமான சான்றிதழ் அளிக்க தேவையில்லை. விடுதியில் சேரும்போது சான்றிதழ்கள் அளிக்க வேண்டும். குறிப்பாக, தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு விடுதியிலும் முகாம் வாழ் இலங்கை தமிழர்களின் பிள்ளைகளுக்காக தனியே 5 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.எனவே, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகள் இச்சலுகை பெற்று, விடுதியில் தங்கி பயன்பெறலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ