உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பருவகால நோய்களிலிருந்து காத்துக் கொள்ளுங்கள்: கலெக்டர் அறிவுறுத்தல்

பருவகால நோய்களிலிருந்து காத்துக் கொள்ளுங்கள்: கலெக்டர் அறிவுறுத்தல்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் பருவ கால நோய்களிலிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கான ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது. கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில், மழைக்கால நோய் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் நடந்தது.அப்போது அவர் பேசியதாவது:மாவட்டத்தில் சுகாதாரத் துறையின் சார்பில் தொடர்ந்து பல்வேறு நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பருவ மழைக்காலம் தொடங்க இருப்பதால், மாவட்டத்தில் நோய் பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்கான முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.கொசுக்களின் மூலம் பரவும் நோய்களான காய்ச்சல் மற்றும் தண்ணீர் மூலம் பரவக்கூடிய வயிற்றுப்போக்கு உள்ளிட்ட நோய்கள் ஏற்படாமல் கட்டுப்படுத்தும் வகையில் அனைத்து கிராமங்களிலும் கொசுப்புழு ஒழிப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். குடிநீர் மற்றும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளை 15 நாட்களுக்கு ஒரு முறை தவறாமல் சுத்தப்படுத்தி தினமும் பொதுமக்களுக்கு சுத்தமான குடிநீரை விநியோகம் செய்ய வேண்டும்.மேலும், கிராமங்கள் தோறும் சுகாதாரத்துறை மற்றும் உள்ளாட்சித் துறை இணைந்து துாய்மைப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.பொதுமக்களுக்கு காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் உடனடியாக அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் அல்லது அரசு மருத்துவமனையினை அணுகி உரிய மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ள வேண்டும்.வீடுகளில் தண்ணீர் சேமித்து வைக்கும் பாத்திரங்களை நன்றாக கழுவி கொசு புகா வண்ணம் மூடி வைத்து பயன்படுத்த வேண்டும். வீட்டைச் சுற்றியுள்ள தேவையில்லாத பொருட்களான டயர், தேங்காய் சிரட்டை, பிளாஸ்டிக் பொருட்கள் போன்றவற்றை அப்புறப்படுத்த வேண்டும். அதில் தண்ணீர் தேங்காமல் பாத்துக் கொள்ள வேண்டும்.பருவகால நோய்களிலிருந்து தங்களை காத்துக்கொள்ளும் வகையில் பொதுமக்கள் அனைவரும் குடிநீரை நன்கு காய்ச்சிப் பருக வேண்டும்.இவ்வாறு கலெக்டர் பேசினார்.டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன், மாவட்ட சுகாதார அலுவலர் ராஜா, நலப்பணிகள் இணை இயக்குனர் (பொ) செந்தில்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ