| ADDED : மே 28, 2024 05:12 AM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி ரயில் நிலையம் நகர பகுதியில்தான் அமைக்கப்படும் என தென்னக ரயில்வே அதிகாரிகள் கலெக்டருக்கு கடிதம் அனுப்பி உள்ளனர்.சின்னசேலம் - கள்ளக்குறிச்சி வரை 16 கி.மீ., துாரம் வரையிலான புதிய ரயில் பாதை பணிகள் தமிழக அரசின் 50 சதவீத நிதி பங்களிப்புடன், கடந்த 2016ல் துவங்கியது. இதற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டு, சிறு, குறு பாலங்கள் அமைக்கும் பணி, 116.6 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படுகிறது.பணிகளை முழுவீச்சில் துவங்கிய தெற்கு ரயில்வே அதிகாரிகள் இந்த திட்டபணிகள் நடப்பாண்டு 2024க்குள் நிறைவடையும் என தெரிவித்திருந்தனர்.பொற்படாக்குறிச்சி வரை நிலம் கையகப்படுத்தப்பட்டு, அதுவரை தண்டவாளங்கள் அமைக்கப்பட்டு ரயில்பாதை துரித கதியில் நடந்து வந்தது. இந்நிலையில், கள்ளக்குறிச்சிக்கான ரயில் நிலையத்தை மாடூர் மற்றும் நிறைமதி கிராம பகுதிகளுக்கு மாற்றிட வேண்டும் என கலெக்டர் அலுவலகம் சார்பில் தென்னக ரயில்வே அதிகாரிகளுக்கு கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 18ம் தேதி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.அதனைத் தொடர்ந்து, ரயில்வே அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு நடத்தி, கலெக்டரின் ஆலோசனையை ஏற்க மறுத்து, ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டிருந்த இடமான கள்ளக்குறிச்சி நகர பகுதி தியாகதுருகம் சாலையில்தான் கள்ளக்குறிச்சி ரயில் நிலையம் அமைக்க முடியும்.கள்ளக்குறிச்சியிலிருந்து திருவண்ணாமலை, உளுந்துார்பேட்டை செல்லும் ரயில் பாதை திட்ட பணிகள் துவங்கி நடந்து வருவதால் உங்களால் அறிவுறுத்தப்படும் மாடூர், நிறைமதி கிராமப் பகுதிகளில் ரயில்நிலையம் அமைக்க முடியாது.ஏற்கனவே திட்டமிட்டபடி, கள்ளக்குறிச்சி நகரில்தான் ரயில் நிலையம் அமைக்கப்பட உள்ளது என கடந்த ஏப்ரல் 23ம் தேதி கடிதம் அனுப்பியுள்ளனர்.அத்துடன் கள்ளக்குறிச்சி - சின்னசேலம் ரயில் திட்ட பணிளை விரைந்து முடித்திடும் வகையில் பொற்படாக்குறிச்சியுடன் நிறுத்தப்பட்டுள்ள ரயில் பாதைக்கான நிலம் கையகப்படுத்தும் பணிகளை துவங்கி விரைந்து நடத்திட வேண்டும்.அதற்கான தொகையாக 68.90 கோடி ரூபாய் நிதியையும் ரயில்வே அதிகாரிகள் கடந்த ஏப்ரல் 24ம் தேதி அனுப்பியுள்ளனர்.கள்ளக்குறிச்சி மாவட்ட அந்தஸ்தை பெற்ற நிலையில், அனைத்து அரசுத்துறை அலுவலகங்களும் வெளியூர்களுக்கு மாற்றப்படுவதை போல், கள்ளக்குறிச்சி ரயில் நிலையமும் ஊரைவிட்டு வெளியே சென்றுவிடுமோ என அச்சத்தில் இருந்த மக்கள் ரயில்வே அதிகாரிகளின் அதிரடி முடிவால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.