| ADDED : மே 03, 2024 11:51 PM
சங்கராபுரம், - 'தினமலர்' நாளிதழ் செய்தி எதிரொலி காரணமாக சங்கராபுரம் நகரில் உள்ள கடைகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டு குட்கா விற்ற 2 கடை உரிமையாளர்களிடம் அபராதம் வசூலித்தனர்.சங்கராபுரம் நகரம் மற்றும் சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் குட்கா விற்பனை அமோகமாக நடைபெற்று வந்தது. தேர்தல் தேதி அறிவிப்பிற்கு முன் போலீசார் மற்றும் சுகாதாரத் துறையிணர் சோதனை நடத்தியதால் விற்பனை தடை செய்யப்பட்டு வந்த நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் போலீசார் தேர்தல் பணியில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர்.இதனால் மீண்டும் குட்கா விற்பனை அதிகளவில் நடைபெறுவதாகவும், இதனைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் எஸ்.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும் என 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது.அதனையொட்டி, நேற்று சங்கராபுரம் நகரில் சுகாதார துறை துணை இயக்குனர் டாக்டர் ராஜா உத்தரவின் பேரில் வட்டார மருத்துவ அலுவலர் சம்பத்குமார் மேற்பார்வையில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சிவபிரகாசம், சுகாதார ஆய்வாளர்கள் சரவணன், பாசில், அன்பரசன், சந்திரன், அறிவழகன் ஆகியோர் கடைவீதி, பூட்டை ரோடு, கல்லை மெயின்ரோடு ஆகிய இடங்களில் 15 க்கும் மேற்பட்ட கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர்.அதில், 2 கடைகளில் இருந்து தலா 50 பாக்கெட் குட்கா பாக்கெட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து கடை உரிமையாளர்களிடமிருந்து தலா 200 ரூபாய் அபராதம் வசூலித்தனர். மேலும், இனி குட்கா விற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.