| ADDED : மே 16, 2024 03:09 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு அதிலிருந்து செப்டிக் டேங்க் கழிவுகள் வெளியேறியதால் பயணிகள், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். நகராட்சி அதிகாரிகள் 10 மணி நேரம் போராடி, கால்வாய் அடைப்பை சீர் செய்து தண்ணீர் ஊற்றி அப்பகுதியில் கழிவுகளை அகற்றினர்.கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் பஸ்கள் வெளியேறும் வழிப்பாதையே அங்குள்ள குடியிருப்புகள், வணிக நிறுவனங்களில் இருந்து கழிவுநீர் வெளியேற்றும் வகையில் கால்வாய் அமைத்துள்ளனர். இந்த கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டதன் காரணமாக நேற்று அதிகாலை 4 மணியளவில் கழிவுநீருடன் சேர்ந்து செப்டிக் டேங்க் கழிவுகளும் வெளியேறியது. இது பஸ் நிலைய பகுதிகளில் பரவி, அப்பகுதியில் துர்நாற்றத்தை ஏற்படுத்தியது. அதிகாலை முதலே பஸ்களில் வெளியூர் செல்ல வந்தவர்கள் இதனை கண்டு அதிருப்தி அடைந்தனர். மேலும் அங்குள்ள கடை வைத்துள்ள வர்த்தக நிறுவனத்தினர் மற்றும் வாகன ஓட்டிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.இதுகுறித்து தகவலறிந்து கள்ளக்குறிச்சி நகராட்சி துப்புரவு ஆய்வாளர் சையத்காதர், மேற்பார்வையாளர்கள் பாலகிருஷ்ணன், வீரமணி ஆகியோர் துாய்மை பணியாளர்களை கொண்டு நேற்று மதியம் 2:00 மணி வரை 10 மணி நேரமாக போராடி, கால்வாய் அடைப்பை நீக்கி அந்த பகுதியில் தேங்கியிருந்த கழிவுகளை தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்தனர். இதனால் 10 மணி நேரத்திற்கு மேலாக பஸ் நிலைய பகுதியில் இருந்த அனைவரும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.இதுபோன்று கள்ளக்குறிச்சி நகராட்சி பகுதியில் பெரும்பாலான குடியிருப்புகளின் செப்டிக் டேங்க் கழிவுகளும் கழிவுநீர் கால்வாயில் கலக்கும் வகையில் மாற்றங்களை செய்துள்ளனர். அதிகாரிகளின் மெத்தனத்தால் இதுபோன்ற அத்துமீறல்கள் கள்ளக்குறிச்சி நகராட்சி எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது.சுகாதார சீர்கேடு விளைவிக்கும் இதுபோன்ற நடவடிக்கைகளை தடுக்க நகராட்சி நிர்வாகம் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து கண்காணித்திட வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.