| ADDED : மே 30, 2024 11:19 PM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி நகராட்சியில் பாதாள சாக்கடை அமைக்கும் திட்டத்தை துவக்குவது எப்போது என மக்கள் எதிர்பார்ப் பில் உள்ளனர்.கள்ளக்குறிச்சி நகராட்சியில் கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தும் கடந்த 55 ஆண்டுகளுக்கு முன்பிருந்தது போன்றே தற்போதும் இருந்து வருகிறது. முறையான சாக்கடை வசதியின்றி, கழிவுநீர் கால்வாய்கள் ஆங்காங்கே அடைத்து கிடப்பதால், கழிவுநீர் வெளியேறி சாலைகளில் வழிந்தோடுகிறது. அத்துடன் பிரதான சாலையின் ஒரு புறத்தில் மட்டுமே சாக்கடை கால்வாய் இருப்பதால் மறுபுறம் வசிப்பவர்களின் கழிவுகள் ஆங்காங்கே தேங்கி குளம்போல் நிரம்பி கிடக்கிறது.மாவட்ட தலைநகரமாகி 5 ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில், தற்போது மக்கள் தொகை பெருக்கமும், வணிக நிறுவனங்களின் வளர்ச்சியும் அதிகரித்து வருகிறது. அதற்கேற்றார்போல் நகராட்சியை மேம்படுத்தும் பணிகளில் முன்னேற்றம் இல்லை.சாக்கடை கால்வாய்கள் துார்ந்துபோய் கழிவுநீர் சாலையில் வழிந்தோடுகிறது. இதனை சீரமைத்திடும் பொருட்டு, கள்ளக்குறிச்சி நகராட்சியில் கடந்த 2022ம் ஆண்டு ஆக., 8ம் தேதி பாதாள சாக்கடை திட்டம் அமைக்க, அனைத்து தெருக்களையும் அளவீடு செய்யும் பணி துவங்கியது. தனியார் நிறுவனத்தின் பங்களிப்புடன் துவங்கிய இந்த பணிகள் அதன்பின் எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் கிடப்பில் போடப்பட்டது.எனவே, பாதாள சாக்கடை திட்டத்தை துவக்க வேண்டும் என, நகர மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.