| ADDED : ஜன 19, 2024 11:03 PM
திருக்கோவிலுார், -அரகண்டநல்லுார் மார்க்கெட் கமிட்டியில் நெல் மற்றும் உளுந்து வரத்து அதிகரித்ததால் நேற்று ஒரே நாளில் 2.49 கோடி ரூபாய் வர்த்தகமானது.ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் அதிக விளை பொருட்கள் ஏலத்திற்கு வரும் கமிட்டிகளில் முக்கிய பங்கு வகிப்பது அரகண்டநல்லுார் மார்க்கெட் கமிட்டியாகும். தற்போது, உளுந்து மற்றும் நெல் அறுவடை தீவிரம் அடைந்திருக்கும் நிலையில், நேற்று நெல் 5,000 மூட்டைகள், உளுந்து 1500, மக்காச்சோளம் 500 மூட்டைகள் என 607.9 மெட்ரிக் டன் விவசாய விளை பொருட்கள் ஏலத்திற்கு வந்தது. இதன் மூலம் 2.49 கோடி ரூபாய்க்கு வர்த்தகமானது.உளுந்து வரத்து அதிகமான நிலையில் அதன் விலையும் குறைவாகவே இருந்தது. நேற்றைய சராசரி விலையாக ஒரு மூட்டை உளுந்து 8,569 ரூபாய்க்கு விற்பனையானது. வரும் நாட்களில் உளுந்து மற்றும் நெல் வரத்து மேலும் அதிகரிக்கக்கூடும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.