உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சங்கராபுரம் தாலுகா அலுவலகத்தில் 4 மணி நேர முற்றுகை போராட்டம்

சங்கராபுரம் தாலுகா அலுவலகத்தில் 4 மணி நேர முற்றுகை போராட்டம்

சங்கராபுரம்: சங்கராபுரம் தாலுகா அலுவலகத்தை கிராம மக்கள் 4 மணி நேரம் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். சங்கராபுரம் அடுத்த அரசம்பட்டு மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா நடத்துவது சம்பந்தமாக இரு தரப்பினரிடையே பிரச்னை ஏற்பட்டது. இது சம்பந்தமாக கள்ளக்குறிச்சி ஆர்.டி.ஓ., லுார்துசாமி தலைமையில் இரு தரப்பினரிடையே பேச்சு வார்த்தை நடந்தது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் ஒரு தரப்பினர் அமைதியான முறையில் தேர்த்திருவிழா நடத்தக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம் 12 வார்டுகளில் இருந்து அரசியல் கட்சி சாராத 12 பேர் கொண்ட குழு அமைத்து திருவிழா நடத்த உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவுப்படி குழு அமைக்கப்பட்டது. இதில் 8 பேர் ஒரு குறிப்பிட்ட கட்சியை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் கோவில் திருவிழாக்குழுவில் இடம்பெறக்கூடாது என்பதை வலியுறுத்தி, நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சங்கராபுரம் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு அங்கு சமையல் செய்யும் போராட்டம் நடத்தினர். தகவலறிந்த ஏடி.எஸ்.பி., திருமால், டி.எஸ்.பி., பார்த்திபன், இன்ஸ்பெக்டர் விநாயகமுருகன் ஆகியோர் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். நள்ளிரவு 12:00 மணிக்கு முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை