உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கல்வராயன்மலையில் தொழிற்சாலைகள் அமைக்க நடவடிக்கை தேவை! மலைவாழ் மக்களின் வாழ்வாதாரம் மேம்படுவதற்கு வாய்ப்பு

கல்வராயன்மலையில் தொழிற்சாலைகள் அமைக்க நடவடிக்கை தேவை! மலைவாழ் மக்களின் வாழ்வாதாரம் மேம்படுவதற்கு வாய்ப்பு

கள்ளக்குறிச்சி: கல்வராயன்மலையில் உள்ள இளைஞர்கள் உள்ளிட்ட மலைவாழ் மக்களின் வாழ்வாதாரம் மேம்பட புதிய தொழிற்சாலைகள் அமைப்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் மேற்கு எல்லையாக கல்வராயன்மலை உள்ளது. கள்ளக்குறிச்சி, சேலம், திருவண்ணாமலை, தருமபுரி ஆகிய 4 மாவட்டங்களில் பரவி காணப்படுகிறது. கல்வராயன்மலை ஒன்றியத்தில் உள்ள 15 ஊராட்சிகளில் 150 க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன். இங்கு 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டடோர் வசிக்கின்றனர். மலைவாழ் மக்கள் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு, தேன் சேகரித்தல் போன்ற மலை சார்ந்த சிறு தொழில்களையே நம்பியுள்ளனர். இதில் போதிய வருமானம் கிடைப்பதில்லை. இதனால் மலைவாழ் மக்கள் பெரும்பாலோனர் தங்களின் வறுமையை போக்கிக்கொள்ள வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு கூலி வேலைக்கு சென்று பிழைப்பு நடத்துகின்றனர். கர்நாடக மாநிலம், மைசூர், மாண்டியா போன்ற இடங்களுக்கு மிளகு பறித்தல், மரம் வெட்டுதல் போன்ற எஸ்டேட் பணிகளுக்கும், சென்னை, கோவை போன்ற பெரு நகரங்களுக்கு கூலி வேலைகளுக்கும், கேரளா மாநிலத்திற்கு செங்கல் சூளை பணிகளுக்கும் சென்று அங்கேயே பல மாதங்கள் தங்கி வேலை செய்கின்றனர். வெளி மாநிலங்கள் மற்றும் பெரு நகரங்களில் பல நாட்கள் தங்கி வேலை செய்தும், போதிய வருவாய் இல்லாததால் மலைவாழ் மக்களின் பொருளாதாரம் இன்றும் கேள்விக் குறியாகவே இருக்கிறது. இவர்களின் பண தேவையை அறிந்து கொண்ட முக்கிய புள்ளிகள் சிலர் அவர்களின் அறியாமையை கொண்டு தங்களின் சுய லாபத்திற்காக, சாராயம் காய்ச்சுதல் மற்றும் சாராயம் கடத்தல் போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடுத்தி வருகின்றனர். மேலும், உடல் பலம் கொண்ட ஆண்களை ஆந்திர மாநிலத்திற்கு செம்மரம் கடத்தல் போன்ற செயல்களிலும் அவ்வப்போது ஈடுபடுத்தி வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஆந்திரா மாநிலத்தில் செம்மரம் கடத்தலின் போது போலீசாரின் துப்பாக்கி சூட்டில் கல்வராயன்மலை சேர்ந்த 5க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். உரிய வேலை வாய்ப்பு இல்லாததால் சாராயம் மற்றும் செம்மரம் கடத்தல் வழக்குகளில் முதுகலை பட்டம் பெற்ற இளைஞர்கள் பலர் சிக்கியுள்ள அவலமும் ஏற்பட்டுள்ளது. கல்வராயன்மலை மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசு சார்பில் பல்வேறு திட்ட பணிகள் மூலம் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. அதில் காடு புறம்போக்கு எனும் அரசு புறம்போக்கு நிலங்களில் விவசாய நிலங்களாக பயன்படுத்தி வரும் இடங்களுக்கு தனிநபர் வன உரிமைச் சான்று வழங்கப்படுகிறது. இளைஞர்களுக்கு தனியார் துறை மூலம் வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. முகாமில் கிடைக்கும் பணிகள் பெரும்பாலும் வெளி மாவட்டங்களில் உள்ள தொழிற் சாலைகளில் தங்கி வேலை செய்யும் நிலை உள்ளது. இதனால் அங்கு வழங்கும் சம்பளம் அவர்களின் செலவிற்கே போதாத நிலை உள்ளது. மலைவாழ் மக்கள் தங்களது வாழ்வாதாரம் மேம்படுத்த பெரும் சிரமப்படுகின்றனர். கல்வராயன்மலையில் மரவள்ளி, மக்காசோளம், கடுக்காய் போன்றவை அதிகளவில் விளைகின்றன. தற்போது மிளகு சாகுபடியும் செய்யப்படுகிறது. மலைவாழ் மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டும், அவர்களின் நிரந்தர வருமானத்திற்கு வழி செய்யும் வகையில் அங்கு விளையும் மூல பொருட்களாக கொண்டு தொழிற்சாலைகள் அமைத்தால் வாழ்வாதாரம் மேம்படும். எனவே, காடுகளின் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் மலையில் புதிய தொழிற் சாலைகள் அமைப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ