கள்ளக்குறிச்சி: பா.ஜ - அ.தி.மு.க., கூட்டணியால் வரும் சட்டசபை தேர்தலுக்கு பின் தமிழகத்தில் டபுள் இன்ஜின் 'சர்கார்' அமையும் என, பா.ஜ., மாநில தலைவர் பேசினார். கள்ளக்குறிச்சியில் பா.ஜ., சார்பில் நடந்த, 'தமிழகம் தலை நிமிர த மிழனின் பயணம்' பிரசார கூட்டத்தில், பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியதாவது; கள்ளக்குறிச்சி மாவட்டத்தை கள்ளச்சாராய மாவட்டமாக ஆக்கியது தி.மு.க.,. இங்கு, 69 பேர் கள்ளச்சாராயத்தால் இறந்தனர். தி.மு.க.,வினரின் ஆசியுடன் கள்ளச்சாராய விற்பனை அமோகமாக நடக்கிறது. உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியும் முதல்வர் ஸ்டாலின் கள்ளக்குறிச்சிக்கு வரவில்லை. ஆனால் அரசியலுக்காக இரவோடு இரவாக கரூர் சென்றார். தி.மு.க., ஆட்சிக்கு வந்த பிறகு இங்குள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கு ஒரு முன்னேற்றம் கூட செய்யவில்லை. கரும்பு டன்னுக்கு 5 ஆயிரம் தருவோம் என கூறி தரவில்லை. கரும்புக்கான நிலுவை தொகையும் தரவில்லை. மரவள்ளி, மஞ்சள் விவசாயிகளையும் ஏமாற்றினார்கள். ஆனால், இப்பகுதியில் உள்ள மரசிற்பத்திற்கு பிரதமர் மோடி புவிசார் குறியீடு பெற்று தந்தார். சமூக நீதி பற்றி பேசும் ஸ்டாலினுக்கு பழங்குடியின மக்கள் நலனில் அக்கரையில்லை. தி.மு.க., கூட்டணியில் உள்ள வி.சி., கட்சி திருமாவளவன் சமூக நீதி பற்றி பேசுகிறார். வேங்கைவயல் சம்பவத்தில் ஈடுபட்டது தி.மு.க.,வினர் என்பதால் திருமாவளவன் மவுனமாக இருக்கிறார். தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு ஒன்றுமே தரவில்லை என்கிறார் ஸ்டாலின். ஆனால் 14 ஆயிரம் கோடி ரூபாய் தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு தந்துள்ளது. பிரதமர் மோடி மக்களுக்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளார். மத்திய அரசு எந்த திட்டங்கள் கொண்டு வந்தாலும் அதை எதிர்க்க வேண்டும் என்ற முனைப்போடு தி.மு.க., செயல்படுகிறது. எஸ்.ஐ.ஆர்.,(சிறப்பு தீவிர திருத்தம்) பணியால் வரும் தேர்தலில் கள்ள ஓட்டு போட முடியாது என்பதால் தி.மு.க.,வினர் எதிர்க்கின்றனர். முதல்வர் ஸ்டாலின் போட்டியிட்ட கொளத்துார் தொகுதியில் மட்டும் இறந்து போனவர்களின் 10 ஆயிரம் ஓட்டுகள் உள்ளது. பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணி நாட்டின் நன்மைக்காக உருவாக்கப்பட்ட கூட்டணி. கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் பழனிசாமி மக்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தினார். தற்போது பா.ஜ - அ.தி.மு.க., ஆகிய இரு கட்சிகள் சேர்ந்துள்ளதால் வரும் சட்டசபை தேர்தலுக்கு பின் தமிழகத்தில், 'டபுள் இன்ஜின் சர்கார்' அமையும். அப்போது தமிழகத்திற்கு தேவையான அனைத்து நிதியும் வரும். இவ்வாறு அவர் பேசினார்.