நகராட்சி பொறியாளருடன் கவுன்சிலர் கணவர் கடும் வாக்குவாதம்: திருக்கோவிலுாரில் பரபரப்பு
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் நகராட்சி பொறியாளருக்கும், கவுன்சிலரின் கணவருக்கும் மொபைல் போனில் நடந்த வாக்குவாதம் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருக்கோவிலுார் நகராட்சியின் பொறியாளர் ஜெயபிரகாஷ் நாராயணன். இவருக்கு சமீபத்தில் இடமாறுதல் வழங்கப்பட்டது. திடீரென ரத்து செய்யப்பட்டு மீண்டும் திருக்கோவிலுார் நகராட்சியில் பணியை தொடர்ந்தார். இந்நிலையில் 16 வது வார்டு கவுன்சிலர் சண்முகவள்ளியின் க ணவர் ஜெகன்நாத், நகராட்சி பொறியாளர் ஜெயபிரகாஷ் இருவரும் மொபைல்போனில் நடந்த வாக்குவாத உரையாடல் சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக ஜெகன்நாத், கவுன்சிலர்களுடன் சேர்ந்து தனக்கு நகராட்சி பொறியாளர் மிரட்டல் விடுவதாக திருக்கோவிலுார் போலீசில் புகார் அளித்தார். பொறியாளர் ஜெயபிரகாஷ் நாராயணனும், திருக்கோவிலுார் போலீஸ் ஸ்டேஷனில் நடந்த சம்பவம் குறித்து தகவல் தெரிவித்தார். நகராட்சியில் மேற்கொள்ளும் பணிகளை ஒப்பந்தப்படி நேர்மையாகவும், முழு அளவில் பணிகளை செய்தால் மட்டுமே பில் வழங்குவதில் பொறியாளர் கடுமை காட்டிய நிலையில், அவரை இடமாற்றம் செய்ய கட்சி பாகுபாடு இன்றி அனைத்து கவுன்சிலர்களும் முயற்சி மேற்கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் மீண்டும் திருக்கோவிலுார் நகராட்சியிலேயே பணியை தொடர்ந்ததால் ஏற்பட்ட ஈகோ இப்பிரச்னைக்கு காரணம் என நகராட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது. இது குறித்து இரு தரப்பினரையும் அழைத்து விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். இச்சம்பவம் திருக்கோவிலூர் நகராட்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.