மரங்களுக்கு தீ வைத்து அத்துமீறல் வரலாற்று சின்னங்கள் அழியும் அபாயம்
தியாகதுருகம் : தியாகதுருகம் மலையில் மரங்களுக்கு தீ வைத்து அத்துமீறலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தியாகதுருகம் நகரின் மையப்பகுதியில் வரலாற்று சிறப்புமிக்க மலை உள்ளது. இதன் மீது, 18 ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோட்டை, பாதுகாப்பு அரண்கள் போரில் சேதம் அடைந்த நிலையில் காணப்படுகிறது. மலைமீது அக்காலத்தில் பயன்படுத்திய, 3 பிரம்மாண்ட பீரங்கிகள் உள்ளன. இது பாதுகாக்கப்பட்ட வரலாற்று சின்னமாக தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இதைக் காண அவ்வப்போது சுற்றுலா பயணிகளும் வந்த செல்கின்றனர். இந்த மலை மீது ஏறுவதற்கு முறையான படிக்கட்டுகள் இல்லை. ஆனாலும் ஆர்வத்துடன் சென்று வருகின்றனர்.கோடையில், இந்த மலை மீது உள்ள மரம் மற்றும் புதர்கள் காய்ந்து விடும். அப்போது மலை மீது ஏறும் சில சமூக விரோதிகள் மரங்களுக்கு தீ வைத்து விடுகின்றனர். ஆண்டுதோறும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடக்கின்றன. குறிப்பாக மலை மீது சென்று மது அருந்திவிட்டு போதையில் இது போன்ற விஷமத்தனத்தில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பாதுகாக்கப்பட்ட வரலாற்று சின்னங்கள் தீயில் சேதமடையும் அபாயம் பன்மடங்காக அதிகரித்துள்ளது. இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'தற்போது கோடை காலம் தொடங்கி உள்ளதால், விஷமிகள் தீயிட்டு மரங்களை எரித்தால், எளிதில் பரவும் சூழல் உள்ளது. அதனால் முன்னெச்சரிக்கையாக இதுபோன்ற அத்துமீறலில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க போலீசார் மலையை சுற்றி கண்காணிப்பில் ஈடுபட வேண்டும். குறிப்பாக மலையடிவாரத்தில் அமர்ந்து மது அருந்தும் குடிமகன்களை எச்சரித்து விரட்ட வேண்டும், ' என்றனர்.