| ADDED : ஜன 10, 2024 11:28 PM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் பள்ளி மற்றும் கல்லுாரியில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நுாற்றாண்டு விழா கருத்தரங்கம் நடந்தது. கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., மெட்ரிக் பள்ளி மற்றும் இந்திலி ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நுாற்றாண்டு விழாவையொட்டி 'சட்டமன்ற நாயகர் - கலைஞர்' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. விழாவிற்கு துணை சபாநாயகர் பிச்சாண்டி தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ., ஞானசேகரன், எம்.எல்.ஏ.,க்கள் வசந்தம் கார்த்திகேயன், உதயசூரியன், மணிக்கண்ணன், டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில், துணை சபாநாயகர் பிச்சாண்டி பேசுகையில்; சட்டசபையில் பொதுமக்களின் பிரச்னைகள், எதிர்கட்சி தலைவரின் கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளித்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ், பெண்களுக்கு சொத்துரிமை, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியவர் என பேசினார்.தொடர்ந்து கருத்தரங்கில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சட்டசபை கூடுதல் செயலாளர் சுப்பிரமணியன், பேரவை செயலக இணைச் செயலாளர் கருணாநிதி, மாவட்ட கல்வி அலுவலர் துரைராஜ், வேலுார் மண்டல கல்லுாரி கல்வி இணை இயக்குனர் எழிலன், கல்லுாரி முதல்வர் முனியன் உட்பட பலர் பங்கேற்றனர்.