தச்சூர் ஊராட்சியில் கிராம சபா கூட்டம்
கள்ளக்குறிச்சி; தச்சூர் ஊராட்சியில் குடியரசு தின கிராம சபைக்கூட்டம் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் நடந்தது.கள்ளக்குறிச்சி ஒன்றியம், தச்சூர் ஊராட்சியில் நடந்த கிராம சபைக்கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை கலெக்டர் பிரசாந்த் பெற்றுக்கொண்டார்.கூட்டத்தில் தச்சூர் ஊராட்சியில் கடந்த ஆண்டு டிச.31 வரையிலான வரவு செலவுக் கணக்குகள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் பணிபுரிய புதிய அட்டைகளை சேர்க்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். மேலும் சுய உதவிக் குழுவில் சேராத மகளிரை மகளிர் சுய உதவிக் குழுக்களில் சேர்த்து கடனுதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.இப்பகுதியில் ரேஷன் கடைகளில் சீரான பொருட்கள் விநியோகம், கால்நடைகளுக்கு சிகிச்சை, பாலம் அமைத்தல், சாலை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார். கிராமப்பகுதி பொதுமக்களின் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து தனிகவனம் செலுத்தி வருகிறது என கலெக்டர் தெரிவித்தார்.கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ரமேஷ்குமார், மகளிர் திட்ட இயக்குநர் சுந்தர்ராஜன், வேளாண்மை இணை இயக்குநர் சத்தியமூர்த்தி, கால்நடைத் துறை உதவி இயக்குநர் கந்தசாமி, பி.டி.ஓ.க்கள் சந்திரசேகரன், சங்கரன், ஊராட்சி தலைவர் மல்லிகா உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.