உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் வீடு ஆளுங்கட்சியினர் முடிவு செய்தால் ஓகே

கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் வீடு ஆளுங்கட்சியினர் முடிவு செய்தால் ஓகே

குடிசையில்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டம் கடந்த 2024ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.கிராமப் புறங்களில் குடிசை மற்றும் ஓட்டு வீடுகளில் வசிக்கும் மக்கள், 360 சதுர அடி பரப்பளவில் கான்கிரீட் வீடு கட்டுவதற்காக 3.50 லட்சம் ரூபாய் உதவித் தொகை வழங்கப்படுகிறது. குறிப்பாக, இத்திட்டத்தில் தேர்வு செய்யப்படும் பயனாளிகளுக்கு சொந்தமாக வீட்டு மனை இல்லையென்றால், அரசாங்கமே வீட்டுமனையை இலவசமாக வழங்கும் என்பது தனி சிறப்பு.இதில் பயனடைய விரும்பும் பயனாளிகள், தங்களது ஊராட்சி அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். உடன், விண்ணப்பதாரரின் விபரம் ஆய்வு செய்யப்பட்டு, கிராம சபைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்படும். தொடர்ந்து, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் பயனாளி அளித்துள்ள தகவல் சரியானதா என்பதை ஆய்வு செய்து, தகுதி அடிப்படையில் தேர்வு செய்ய வேண்டும் என்பது விதிமுறை.ஆனால், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த பயனாளிகளை அதிகாரிகள் தேர்வு செய்வதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியதும், விண்ணப்பதாரர் தங்களது ஊரில் உள்ள தி.மு.க., கிளைச் செயலாளர் அல்லது ஆளுங்கட்சியைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதியை சந்திக்க வேண்டும்.அங்கு, தீர்மான நகலுடன், தி.மு.க., முக்கியஸ்தரின் 'லெட்டர் பேடில்' பயனாளி விபரத்தை எழுதி பரிந்துரை கடிதம் வழங்குவர். அதேபோல், தி.மு.க.,வுடன் கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்., - வி.சி., - கம்யூ., உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் தங்களது கட்சி நிர்வாகியின் 'லெட்டர் பேடில்' பரிந்துரை கடிதம் பெற்று, தி.மு.க., முக்கியஸ்தர்களிடம் வழங்குவர்.தொடர்ந்து, தி.மு.க., ஒன்றிய செயலாளர் அல்லது ஒன்றிய சேர்மன், பயனாளிகளின் விபரங்களை சரிபார்த்து, சம்மந்தப்பட்ட அலுவலருக்கு வழங்குவர்.இவ்வாறு கட்சி ரீதியாக அனுப்பும் பட்டியலில் உள்ள நபர்களை உடனடியாக தேர்வு செய்து, கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கான ஆணை வழங்கப்படுகிறது.அரசு அதிகாரிகள் செய்ய வேண்டிய பணியை, ஆளுங்கட்சியினர் செய்வதால், அ.தி.மு.க., - தே.மு.தி.க., - பா.ம.க., உள்ளிட்ட கட்சிகளில் அங்கம் வகிப்பவர்களுக்கும், எந்த கட்சியையும் சாராத ஏழை, எளியவரும் இத்திட்டத்தில் பயன்பெற முடியாத நிலை உள்ளது. ஒரு சில இடங்களில் பெயரளவில் சிலருக்கு வீடு கட்ட பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ