மஞ்சள் காமாலை நோயால் பாதிப்பு; உணவு பொருள் வழங்கிய எம்.எல்.ஏ.,
கள்ளக்குறிச்சி ; அணைகரைக்கோட்டாலம் அரசு துவக்கப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சத்துமிக்க உணவு பொருட்களை எம்.எல்.ஏ., வழங்கினார்.கள்ளக்குறிச்சி அடுத்த அணைகரைக்கோட்டாலத்தில் உள்ள சிலர் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. இதையடுத்து சுகாதாரத் துறையினர் கடந்த 4 நாட்களாக அக்கிராமத்தில் முகாம் அமைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.இதில், காய்ச்சல், தலைவலி உள்ளிட்ட பிரச்னைகளுடன் உள்ள பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகளை பரிசோதனை செய்ததில், 5 சிறுவர்களுக்கு மஞ்சள் காமாலை நோய்க்கான அறிகுறி இருப்பது தெரிந்தது.மேலும் சிலர் சாதாரண காய்ச்சல், சளி, உடல்வலி உள்ளிட்ட பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்ட குடிநீர் மாதிரியை சேகரித்து, சென்னை, கிண்டியில் உள்ள பரிசோனை மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.இந்நிலையில், அணைகரைக்கோட்டாலத்தில் செயல்படும் மருத்துவ முகாமினை உதயசூரியன் எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார். தொடர்ந்து, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சத்துமிக்க உணவு பொருட்கள், பழங்களை வழங்கி, தண்ணீரை காய்ச்சி பருகுமாறு அறிவுறுத்தினார்.அப்போது, ஒன்றிய சேர்மன் அலமேலு ஆறுமுகம், கொள்ளை நோய் நிபுணர் பங்கஜம், வட்டார மருத்துவ அலுவலர் பாலதண்டாயுதபாணி, ஊராட்சி தலைவர் வெங்கடேசன், வி.ஏ.ஓ., பாலாஜி, தி.மு.க., இளைஞரணி அமைப்பாளர் அருள், பள்ளி தலைமை ஆசிரியர் ஏழுமலை உட்பட பலர் உடனிருந்தனர்.