பைக் மீது கார் மோதி விபத்து தாய், தந்தை, மகன் பலி
திருக்கோவிலுார்:கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலுார் அடுத்த மாடாம்பூண்டியை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் நாராயணன், 22. இவருக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. வரும் செப்., 4ம் தேதி திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது. இதையடுத்து, நேற்று முன்தினம் தந்தை ஆறுமுகம், 45, தாய் சென்னியம்மாள், 42, ஆகியோருடன் பைக்கில் சென்று உறவினர்களுக்கு அழைப்பு பத்திரிகை வைத்தார். அன்றைய தினம் இரவு, ஸ்பிளெண்டர் பிளஸ் பைக்கில் மூவரும் வீடு திரும்பினார். பகண்டை கூட்ரோடு அருகே சென்ற போது, எதிரே வந்த, 'பிகோ போர்டு' கார் மோதியது. விபத்தில் காயமடைந்த மூவரும், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட சில மணி நேரத்தில் ஆறுமுகம் இறந்தார். அவரை தொடர்ந்து, இரவு 8:40 மணிக்கு சென்னியம்மாள் உயிரிழந்தார். மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் நாராயணன் உயிரிழந்தார்.