| ADDED : பிப் 23, 2024 03:50 AM
திருக்கோவிலுார்: கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு வெளி மாவட்ட வியாபாரிகள் படையெடுத்து வைக்கோலை வாங்கி செல்கின்றனர். இதனால், கோடை காலத்தில் மாவட்டத்தில், கால்நடைகளுக்கு வைக்கோல் தீவனம் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இந்தாண்டு வடகிழக்கு பருவ மழை போதியதாக இல்லை. இருந்தும் கோமுகி அணை உள்ளிட்ட நீர் நிலைகள் ஓரளவு நிரம்பின. இதன் காரணமாக விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளில் கிணறு, போர் பாசனங்கள் மூலம் நெல் சாகுபடி செய்யப்பட்டது.தற்போது அறுவடைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இயந்திரங்கள் மூலம் அறுவடைப் பணிகள் நடக்கிறது. இதையடுத்து வைக்கோலையும் இயந்திரம் மூலம் கட்டுகளாக கட்டி வருகின்றனர்.இந்நிலையில், சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல், கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்ட வியாபாரிகள் இப்பகுதிக்கு படையெடுத்து ஒரு கட்டு வைக்கோல் ரூ.250 வீதம் வாங்கி, டாட்டா ஏஸ், டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களில் ஏற்றி செல்கின்றனர். இதனால், விவசாயிகளுக்கு கூடுதல் லாபம் கிடைக்கிறது. இதனிடையே கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், குறைந்த அளவிலேயே நெல் சாகுபடி செய்யப்பட்டதால், கால்நடைகளுக்கான முக்கிய தீவனமாக இருக்கும் வைகோல் பற்றாக்குறை ஏற்படும் சூழல் உள்ளது.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், கடந்தாண்டு இறுதியில் குறைந்த வடக்கிழக்கு பருவ மழை காரணமாக பெரும்பாலான பகுதிகளில் மூன்று போகம் நெற்பயிர் சாகுபடி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், வெளி மாவட்ட வியாபாரிகள் வைக்கோலை வாங்கி செல்வதால், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வரும் கோடை காலத்தில் வைக்கோல் தீவனத்திற்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உள்ளது.இதற்கிடையே நீர் பாசன வசதியுள்ள நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் சிலர் தங்களது நிலத்தில் பசுந்தீவனம் வளர்த்து கால்நடைகளை பாதுகாத்து கொள்கின்றனர். நிலம் இல்லாத பெரும்பாலான கால்நடை வளர்போர் பாதிப்புக்குள்ளாகும் சூழ்நிலை உள்ளது.