| ADDED : நவ 16, 2025 03:46 AM
சங்கராபுரம்: சங்கராபுரம் அருகே விவசாயி மர்ம மரண வழக்கில் குற்றவாளியை கைது செய்யாததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர். சங்கராபுரம் அடுத்த எஸ்.குளத்துார் கிராமத்தை சேர்ந்தவர் அய்யாசாமி மகன் பொன்னுசாமி, 62; விவசாயி. இவர் நேற்று முன்தினம் மதியம் தனக்கு சொந்தமான விவசாய நிலத்திற்கு உரம் போட செல்வதாக கூறிவிட்டு சென்றார். மாலை வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால், அவரது உறவினர்கள் தேடி சென்றனர். அப்போது, விவசாய நிலத்தில் தலையில் ரத்த காயங்களுடன் பொன்னுசாமி இறந்து கிடந்தார். இது குறித்து புகாரின்பேரில் சங்கராபுரம் போலீசார் இறந்த பொன்னுசாமியின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லுாரிக்கு அனுப்பி வைத்தனர். பொன்னுசாமியை அடித்து கொலை செய்த மர்ம நபர்களை கைது செய்ய கோரி, அவரது உறவினர்கள் நுாற்றுக்கும் மேற்பட்டோர் நேற்று மாலை 4:00 மணிக்கு, கள்ளக்குறிச்சி - திருவண்ணாமலை சாலையில் எஸ்.குளத்துார் பஸ் நிறுத்தம் அருகே திடீர் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த திருக்கோவிலுார் டி.எஸ்.பி., பார்த்திபன், தாசில்தார் வைரக்கண்ணன், திருக்கோவிலுார் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், சங்கராபுரம் இன்ஸ்பெக்டர் விநாயகமுருகன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின் குற்றவாளியை கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதன்பின்பு, மாலை 5:00 மணிக்கு மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். ஒரு மணி நேரம் நடந்த சாலை மறியலால் கள்ளக்குறிச்சி - திருவண்ணாமலை சாலையில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுக்கும் பொருட்டு டி.எஸ்.பி., பார்த்திபன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.