| ADDED : நவ 24, 2025 06:53 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டசபை பேரவையின் பொது கணக்கு குழு ஆய்வு இன்று நடக்கிறது. இதுகுறித்து கலெக்டர் பிரசாந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு : தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் 2024-2026-ஆம் ஆண்டிற்கான பொது கணக்கு குழு இன்று காலை குழு தலைவரான ஸ்ரீபெரும்புதுார் எம்.எல்.ஏ., செல்வபெருந்தகை தலைமையில் ஆய்வு நடத்துகின்றனர். பொது கணக்கு குழு உறுப்பினர்கள் அடங்கிய குழு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அரசு துறைகளின் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளனர். இக்குழு காலை 9:30 மணிக்கு கள்ளக்குறிச்சி சுற்றுலா மாளிகையிலிருந்து புறப்பட்டு, காலை 9:45 மணிக்கு தியாகதுருகம் தீயணைப்பு நிலையத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்கின்றனர். தொடர்ந்து ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவில், கள்ளக்குறிச்சி நுண்ணுயிர் உரம் தயாரிப்பு மையத்தினை பார்வையிடுகின்றனர். பின்னர், கள்ளக்குறிச்சி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, புதிதாகக் கட்டப்பட்டு வரும் சின்னசேலம் பஸ் நிலைய கட்டுமான பணிகளை ஆய்வு செய்கின்றனர். அதன்பின் மதியம் 3:00 மணிக்கு கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அனைத்துத் துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடத்துகின்றனர் என கூறப்பட்டுள்ளது.