| ADDED : ஜன 24, 2024 04:18 AM
கள்ளக்குறிச்சி : மணலுார்பேட்டையில் அகற்றப்பட்ட பயணிகள் நிழற்குடை அமைப்பது தொடர்பாக தே.மு.தி.க.,வினருடன் சமாதான கூட்டம் நடந்தது.மணலுார்பேட்டை - தியாகதுருகம் சாலை ஆஞ்சநேயர் கோவில் அருகே ரிஷிவந்தியம் தொகுதி எம்.எல்.ஏ.,வாக விஜயகாந்த் இருந்தபோது, தொகுதி மேம்பாட்டு நிதியில் பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டது. சில மாதங்களுக்கு முன் சாலை விரிவாக்கப் பணிக்காக பயணிகள் நிழற்குடை அகற்றப்பட்டது.அதே இடத்தில் மீண்டும் பயணிகள் நிழற்குடை அமைத்து கொடுக்கப்படும் என நெடுஞ்சாலைத் துறையினர் வாக்குறுதி அளித்த நிலையில், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.இதனை கண்டித்து கள்ளக்குறிச்சி மாவட்ட தே.மு.தி.க.,வினர் கடந்த 20ம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்த அறிவித்தனர். இந்நிலையில் கள்ளக்குறிச்சி ஆர்.டி.ஓ., அலுவலகம் தே.மு.தி.க., மாவட்ட நிர்வாகிகளுக்கு சமாதான கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தது. இதனால் உண்ணாவிரத போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து ஆர்.டி.ஓ., (பொறுப்பு) கிருஷ்ணன் தலைமையில் நேற்று சமாதான கூட்டம் நடந்தது. தே.மு.தி.க., மாவட்ட செயலாளர் கருணாகரன் தலைமையில் நிர்வாகிகள் பங்கேற்றனர்.கூட்டத்தில் கோரிக்கை தொடர்பாக மனு அளிக்குமாறும், ஆய்வு செய்து அதே இடத்தில் பயணிகள் நிழற்குடை அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக தே.மு.தி.க.,வினர் அறிவித்தனர்.