கல்வராயன்மலையில் மீண்டும் கள்ளச்சாராயம்; ரகசிய ரெய்டு நடத்தி அழித்து வரும் போலீசார்
கல்வராயன்மலையில் மீண்டும் கள்ளச்சாராயம் காய்ச்சுவது மற்றும் விற்பனை துவங்கி இருப்பது பொதுமக்களை அதிர்ச்சிடையச் செய்துள்ளது.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கருணாபுரம், மாதவச்சேரி, சேஷசமுத்திரம் ஆகிய பகுதிகளில் கடந்த ஜூன் 19ம் தேதி விற்பனை செய்த மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் வாங்கி குடித்து 229 பேர் பாதிக்கப்பட்டனர். இதில் 68 பேர் இறந்தனர். இச்சம்பவம் தமிழகத்தையே உலுக்கிய நிலையில், மாவட்டம் முழுவதும் கள்ளச்சாராயம் விற்பனையில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதனால், கல்வராயன்மலையில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதும் குறைந்தது.இந்நிலையில் கடந்த சில நாட்களாக கல்வராயன்மலையில் கள்ளச்சாராயம் காய்ச்சுவது மெல்ல மெல்ல சாராய வியாபாரிகள் சிலர் துவங்கியுள்ளனர்.எஸ்.பி., ரஜத் சதுர்வேதி மேற்பார்வையில் சப் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 3 சிறப்பு படைகள் அமைத்து கல்வராயன்மலையில் ரகசியமாக சோதனை நடத்தி ஊறல்கள் மற்றும் விற்பனைக்காக வைத்திருந்த கள்ளச்சாராயத்தை கண்டுபிடித்து அழிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.அதன்படி சமீபத்தில் 200 லிட்டர் சாராய ஊறல்கள் மற்றும் சேராப்பட்டு காட்டுக்கொட்டாயைச் சேர்ந்த வெங்கடேசன், 45; என்பவரிடமிருந்து 2 லாரி டியூப்புகளில் 80 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்து கைது செய்துள்ளனர். அதேபோல் சேத்துார் காட்டுகொட்டாய் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்கு பயன்படும் ஒன்றரை டன் வெல்லமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மலையில் மீண்டும் கள்ளச்சாராயம் காய்ச்சுவது படிப்படியாக அதிகரித்துள்ளதால், சோதனை பணிகளை போலீசார் தீவிரப் படுத்தி உள்ளனர்.
'வாட்ஸ் ஆப்'பில் பகிர கட்டுப்பாடு
கல்வராயன்மலையில் சாராய ஊறல் மற்றும் கள்ளச்சாராய அழிப்பின்போது, போலீசார் புகைப்படும் எடுப்பதும், அதனை வாட்ஸ் ஆப்பில் பகிர்ந்தும் வந்தனர். தற்போது அதுபோன்று பகிர்ந்தால் இன்னும் கள்ளச்சாராயம் ஒழிக்கப்படவில்லை என்ற அவப்பெயர் ஏற்படும் என்பதால், இனி அதுபோன்று புகைப்படம் பகிரக்கூடாது என போலீசாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் போலீசார் ரகசியமாக கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருவரும் தெரியவந்துள்ளது.