உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கல்வராயன் மலைக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் : படகு சவாரி துவங்க நடவடிக்கை தேவை

கல்வராயன் மலைக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் : படகு சவாரி துவங்க நடவடிக்கை தேவை

கச்சிராயபாளையம்: கல்வராயன் மலையில் உள்ள படகு துறையில் படகுகள் இல்லாததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். கல்வராயன் மலை கிழக்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக உள்ளது. இது சின்ன கல்வராயன், பெரிய கல்வராயன் என இரு பகுதிகளை கொண்டுள்ளது. இந்த மலை திருவண்ணாமலை, தருமபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களின் எல்லை பகுதியாக அமைந்துள்ளது. 600 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட கல்வராயன் மலையில் பெரியார், கவியம், மேகம், சிறுகலுார், எட்டியாறு போன்ற பல்வேறு நீர் வீழ்ச்சிகள் உள்ளன. மேலும் கரியாலுார் சிறுவர் பூங்கா, மூங்கில் குடில்கள் போன்றவைகளும் உள்ளன. கல்வராயன் மலைக்கு பல்வேறு மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலங்களிலிருந்தும் சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்துடன் அதிகளவில் வந்து செல்கின்றனர். பெரியார் நீர் வீழ்ச்சி மட்டுமே சாலைக்கு மிக அருகில் உள்ளது. மற்ற நீர் வீழ்சிகள் நீண்ட துரம் வனப்பகுதியில் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் வனப்பகுதிக்குள் இருக்கும் நீர் வீழ்ச்சிகளுக்கு இளைஞர்கள் மட்டுமே சென்று வருகின்றனர். கல்வராயன் மலைக்கு வரும் சுற்றுலா பயணிகள் பெரியார் நீர் வீழ்ச்சி மற்றும் படகு துறைக்கு அதிகளவில் வந்து செல்கின்றனர். குறிப்பாக குழந்தைகள் மற்றும் பெண்கள் அதிகளவில் படகு துறைக்கு வருகின்றனர். கரியாலுார் அருகே உள்ள படகு துறையில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் வனத்துறை சார்பில் 10 சவாரி செய்யும் படகுகள் விடப்பட்டது. 4 படகுகள் பழுதான நிலையில் மீண்டும் 2 புதிய படகுகள் கடந்த ஆண்டு வாங்கப்பட்டது. படகு துறையில் நிறுத்தபட்டிருந்த 6 படகுகள் கடந்த ஆண்டு ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் படகுகள் அனைத்தும் அடித்து செல்லப்பட்டது. ஒரு ஆண்டு காலமாக வேறு படகுகள் எதுவும் வாங்கவில்லை. இதனால் கல்வராயன் மலைக்கு வரும் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்ய முடியாததால் மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். கல்வராயன் மலைக்கு வரும் சுற்றுலா பயணிகள் பெரியார் நீர் வீழ்ச்சியில் குளிப்பதையும் படகு சவாரி செய்வதையுமே அதிகளவில் ஆர்வம் காட்டி வந்தனர். இந்நிலையில் கடந்த ஒரு வருட காலமாக படகு சவாரி செய்யமுடியாததால் மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். கல்ராயன் மலையை சுற்றுலா தலமாக அறிவிக்க கோரி மக்கள் எதிர்பார்த்து வரும் நிலையில் சுற்றுலா பயணிகள் அதிக விரும்பும் படகு சாவாரியை மீண்டும் துவங்க எந்த வித நடவடிக்கையும் எடுக்காதது பொது மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சுற்றுலா பயணிகளின் விருப்பத்திற்கு இணங்க, கல்வராயன் மலையில் மீண்டு படகு சவாரி துவங்க மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி