உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / நமக்கு ஏன் வம்பு குற்றசெயலை கண்டுகொள்ளாத போலீசார்; சட்டம் ஒழுங்கு சீர்கெடும் அபாயம்

நமக்கு ஏன் வம்பு குற்றசெயலை கண்டுகொள்ளாத போலீசார்; சட்டம் ஒழுங்கு சீர்கெடும் அபாயம்

சிவகங்கை மாவட்டம், திருபுவனம் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார். குற்றப்பிரிவு போலீஸ் தாக்குதலில் அஜித்குமார் இறந்தார். இச்சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இவ்வழக்கு சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றப்பட்டு இது தொடர்பாக 5 போலீசார் கைது செய்யப்பட்டனர். இச்சம்பவத்திற்கு பிறகு கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராயபாளையம் போலீஸ் ஸ்டேஷனில் விசாரணைக்கு வந்த நபரை போலீசார் அடிப்பது போன்ற வீடியோ வைரலானது. இன்றைய கால கட்டத்தில், அனைவரிடமும் மொபைல்போ ன் உள்ளது. இதனால்,எந்த நேரத்திலும் எந்த சம்பவம் நடந்தாலும் உடனடியாகவீடியோ எடுத்து அதை சமூக வலைதளத்தில் வைரல் செய்து விடுகின்றனர். அஜித் குமார் கொலை சம்பவத்திற்கு பிறகு சமீபகாலமாக குற்ற செயலில் ஈடுபடுபவர்களை அழைத்து விசாரணை செய்வதற்கு கூட போலீசார் தயக்கம் காட்டுகின்றனர். குறிப்பாக பொது வெளியில் அத்துமிறலில் ஈடுபடுபவர்களை கண்டுகொள்ளாமல் போலீசார் வேடிக்கை பார்க்கும் நிலையே உள்ளது. சாலையோரம் உட்கார்ந்து மது அருந்துபவர்கள், மக்கள் கூடும் இடங்களில் மது போதையில் ரகளை செய்யும் ஆசாமிகள், பைக்கில் அதிவேகமாக செல்லும் இளைஞர்கள், போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளிடம் போலீசார் கண்டிப்புடன் நடந்து கொள்வதில்லை. இதனால் மாவட்டத்தில் குற்ற செயல்கள் அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்வார்கள் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் சட்டம் ஒழுங்கு சீர்கெடும் அபாயம் ஏற்படும். போலீசாருக்கு உளவியல் ரீதியாக தகுந்த ஆலோசனை வழங்கி பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவதில் போலீசார் ஈடுபாட்டுடன் பணிபுரிய உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !