உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பள்ளி, கல்லுாரி நேரங்களில் கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா? படியில் தொங்கிச் செல்லும் மாணவர்கள்

பள்ளி, கல்லுாரி நேரங்களில் கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா? படியில் தொங்கிச் செல்லும் மாணவர்கள்

கள்ளக்குறிச்சி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பள்ளி, கல்லுாரிகள் உள்ளன. இக்கல்வி நிறுவனங்களில் சின்னசேலம், சங்கராபுரம், கச்சிராயபாளையம், தியாகதுருகம் மற்றும் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஏராளமான மாணவி, மாணவிகள் பயின்று வருகின்றனர்.இவர்கள் அனைவரும் கள்ளக்குறிச்சி பஸ்நிலையத்தில் இருந்து பள்ளி, கல்லுாரிக்கு செல்ல வேண்டும்.இதில், சடையம்பட்டு பகுதியில் உள்ள அரசு கல்லுாரி மாணவ, மாணவியர்கள் பெரும்பாலானோர் கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் இருந்து செல்கின்றனர். இம்மாணவர்களுக்காக காலை மற்றும் மாலை நேரத்தில் தடம் எண்.25 உட்பட 3 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த 3 பஸ்களை தவற விட்டால், காரனுார் பஸ் நிறுத்தத்தில் இறங்கி, அங்கிருந்து 3 கி.மீ., தொலைவு நடந்து கல்லுாரிக்குச் செல்ல வேண்டும்.வேறு பஸ்கள் இல்லை. கல்லுாரியில் பயிலும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கைகேற்ப பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால், மாணவர்கள் வேறு வழியின்றி அரசு பஸ்களில் கூட்ட நெரிசலில் சிக்கி, படியில் தொங்கியவாறு ஆபத்தான முறையில் தினமும் பயணிக்கின்றனர்.குறிப்பாக, மாணவிகளும் படியில் தொங்கியவாறு செல்வதால் பெற்றோர்கள் அச்சமடைந்துள்ளனர்.பஸ் இல்லாததால் மாணவர்கள் சிலர் பைக்கில் கல்லுாரிக்குச் வருகின்றனர். அவர்கள், வேகமாக செல்கின்றனர். இதனால், கீழே விழுந்து விபத்தில் சிக்கி விடுவார்களோ என்ற அச்சம் உள்ளது.அவ்வப்போது, பஸ் படியில் தொங்கியவாறு செல்பவர்களும், பைக்கில் வேகமாக செல்பவர்களும் தவறி விழுந்து காயமடைந்த சம்பவங்களும் தொடர் கதையாக உள்ளது. எனவே, மாணவ, மாணவிகளின் நலன் கருதி கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் இருந்து அரசு கல்லுாரிக்கு கூடுதல் பஸ் வசதி ஏற்படுத்திட அரசு போக்குவரத்துக் கழகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !