உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சங்கராபுரம் 4 வழிச்சாலையில் ஹைமாஸ் விளக்குகள்... அமைக்கப்படுமா?: பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய கோரிக்கை

சங்கராபுரம் 4 வழிச்சாலையில் ஹைமாஸ் விளக்குகள்... அமைக்கப்படுமா?: பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய கோரிக்கை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி - சங்கராபுரம் நான்கு வழிச்சாலையில், விபத்துக்களை தடுக்க கிராம சாலை சந்திப்பு பகுதிகளில் ஹைமாஸ் விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கள்ளக்குறிச்சியில் இருந்து சங்கராபுரம், மூங்கில்துறைப்பட்டு, வாணாபுரம் வழியாக திருவண்ணாமலைக்கு தினமும் பஸ், லாரி, கார் உட்பட இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. குறிப்பாக கச்சிராயபாளையம் மற்றும் மூங்கில்துறைப்பட்டில் உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் அரவை பருவம் துவங்கும் போது கரும்பு வாகன போக்குவரத்து அதிகமாக காணப்படும். மேலும், மாதந்தோறும் பவுர்ணமி தினத்தன்று திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வதற்காக பொதுமக்கள் இச்சாலையை பயன்படுத்தி வருகின்றனர். வாகன போக்குவரத்து மிகுதியாகன இச்சாலை குறுகலான நிலையில் இரு வழிச்சாலையாக இருந்தது. கரும்பு ஏற்றிச் செல்லும் வாகனங்கள் உட்பட கனரக வாகனங்கள் செல்லும் போது ஒன்றயையொன்று எளிதில் கடந்து செல்ல முடியாத நிலை இருந்தது. பல இடங்களில் சாலை குறுகியதாகவும், ஆபத்தான வளைவு பகுதிகள் இருள் சூழ்ந்து காணப்பட்டதால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வந்தன. பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் வகையில் சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என பொதுமக்கள மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து நெடுஞ்சாலைத்துறை மூலம் ரூ.176 கோடி மதிப்பில் நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில் கள்ளக்குறிச்சி - சங்கராபுரம் வரை 18 கி.மீ., தொலைவிலான நான்கு வழிச்சாலை பணிகள் முடிந்து தற்போது போக்குவரத்து பயன்பாட்டில் உள்ளது. சாலையின் நடுவே சென்டர் மீடியன் தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் சாலையோரம் நடைமேடை கற்கள் அமைக்கப்பட்டுள்ளன. சாலையை ஒட்டியவாறு இருபுறமும் உள்ள கிராமங்களுக்கு செல்வதற்காக, பல்வேறு இடங்களில் சென்டர் மீடியன் தடுப்பு கட்டையில் இடைவெளி விடப்பட்டுள்ளது. இதனால் மும்முனை மற்றும் நான்குமுனை சந்திப்புகள் அதிகமாக உள்ளன. இதில், அரியபெருமானுார், ஆலத்துார், மூரார்பாளையம், மயிலாம்பாறை ஆகிய ஊர்களில் மட்டுமே சாலையோரத்தில் மின் விளக்குகள் உள்ளன. அதில் இருந்து வரும் வெளிச்சமும் சாலைக்கு போதுமானதாக இல்லை. மற்ற சாலை சந்திப்பு இடங்களில் ஹைமாஸ் விளக்குகள் இல்லாததால் இரவு நேரத்தில் சாலை கும்மிருட்டாக உள்ளது. இதனால், இரவு நேரங்களில் சாலையின் குறுக்கே கடப்பவர்கள் மீது வாகனங்கள் மோதி விபத்து ஏற்பட்டு வருகிறது. சில இடங்களில் வாகன ஓட்டிகளை எச்சரிக்கும் வகையில் சாலை ஓரம் மற்றும் நடுப்பகுதியில் வெள்ளை நிற ரிப்ளக்டர் கோடுகளும் இல்லை. இதனால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்து வருகின்றனர். எனவே, கள்ளக்குறிச்சி - சங்கராபுரம் நான்கு வழிச்சாலையில், கிராம சாலை சந்திப்புகள், வளைவு பகுதி, விபத்து அதிகம் ஏற்படும் இடங்களில் ஹைமாஸ் விளக்குகள் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை