| ADDED : ஜூலை 22, 2024 11:44 PM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பருவ மழை துவங்கும் முன் மத்திய ஆய்வு குழு பரிந்துரைப்படி மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை முழுமையாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மழையால் கிடைக்கும் நீரினை, அதிகளவில் சேகரித்து நிலத்தடி நீர்மட்டத்தை தொடர்ந்து உயர்த்திட வேண்டுமென மத்திய குழுவினர் பரிந்துரைத்துள்ளனர்.அதன்படி பருவ மழைக்காலம் துவங்குவதற்கு முன்னதாகவே மாவட்டம் முழுவதும் நகராட்சி மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் மழைநீர் நீர் சேகரிப்பு பணிகளை முழு ஈடுபாட்டுடன் செயல்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஆண்டுதோறும் ஜூன் முதல் செப்டம்பர் வரை தென்மேற்கு பருவமழை, அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்கு பருவமழையும் பெய்வது வழக்கம். கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது.மாவட்டத்தில் உள்ள கோமுகி மற்றும் மணிமுக்தா அணைகளும், விவசாயத்திற்கு பெரிதும் உதவுகின்றன.ஆனால், மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஏரிகள் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியிருப்பதால் தண்ணீர் நிரம்புவதில்லை. சிறிதளவு தேங்கும் நீரும் உடனடியாக வறண்டு விடுகிறது.இதனால் தண்ணீர் பற்றாக்குறையை தவிர்க்க ஆறுகளின் குறுக்கே தடுப்பணையும், வீடு மற்றும் அரசு அலுவலகங்களில் மழைநீர் சேமிப்பு கட்டமைப்பும் ஏற்படுத்தப்பட்டது.ஆனால், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மழைநீர் சேகரிப்பு திட்டம் முழுமையாக செயல் வடிவம் பெறாமல் உள்ளது. இதனால், மழைநீர் சேமிப்பு என்பதை ஏட்டளவில் மட்டுமே உள்ளது. முன்னதாக அரசு அலுவலக கட்டடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும். அத்துடன் அனைத்து வீடுகளிலும் இந்த திட்டத்தை முழுமையாக செயல்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஜல்ஜீவன் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு செய்த மத்திய குழுவினர் மழையால் கிடைக்கும் நீரினை, அதிகளவில் சேகரித்து நிலத்தடி நீர்மட்டத்தை தொடர்ந்து உயர்த்திட வேண்டுமென பரிந்துரைத்து செய்திருந்தனர்.இன்னும் ஒரு சில வாரங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், மாவட்டத்தில் மழைநீர் சேகரிப்பின் அவசியத்தை மக்களிடத்தில் கொண்டு சேர்க்க அரசு முனைப்பு காட்ட வேண்டும். அரசு அலுவலகங்களில் காட்சி பொருளாக உள்ள மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை புதுப்பிப்பதுடன், அனைத்து வீடுகளிலும் மழைநீர் சேகரிப்பினை கட்டாயமாக்கிட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.