உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், அரும்புலியூர் கிராமத்தில் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில், 450 ஏக்கர் பரப்பிலான ஏரி உள்ளது. பருவ மழைக்கு இந்த ஏரி முழுமையாக நிரம்பினால், அத்தண்ணீரைக் கொண்டு, அரும்புலியூர், சீத்தாவரம், காவணிப்பாக்கம், கரும்பாக்கம், மாம்பாக்கம் ஆகிய கிராமங்களில் உள்ள 1,000 ஏக்கர் பரப்பிலான விவசாய நிலங்கள் பாசனம் பெறும். விவசாயிகள் திட்டம்
கடந்த பருவ மழைக்கு இந்த ஏரி முழுமையாக நிரம்பியதை அடுத்து, முதல் போகத்திற்கான சம்பா பருவத்திற்கு நெல் பயிரிட்டு அறுவடை செய்தனர். அதைத் தொடர்ந்து, ஏரியில் கணிசமான அளவிற்கு நீர் இருப்பு காரணமாக இரண்டாம் போகம் சொர்ணவாரி பட்டத்திற்கு நெல் பயிரிட்டனர்.அப்பயிர்கள் நன்கு வளர்ந்து அறுவடைக்கு தயாரான நிலையில் இருந்தது. அப்பயிர்களை சில தினங்களில் அறுவடை செய்ய விவசாயிகள் திட்டமிட்டிருந்தனர்.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையால் நெல் பயிரிட்ட பல ஏக்கர் பரப்பிலான நிலங்களில் மழைநீர் தேங்கியது. நேரில் ஆய்வு
ஒரு சில நிலப்பகுதிகளில் வரப்புகளை வெட்டி மழைநீரை வெளியேற்றினாலும், 100 ஏக்கரிலான நெற்பயிர் மழைநீரில் மூழ்கி சேதமானது.அப்பயிர்கள் அறுவடை செய்ய முடியாத நிலை உள்ளதாகவும் அறுவடை செய்தாலும் நெல் முளைப்பு காரணமாக போதுமான மகசூல் கிடைக்காது என, விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.எனவே, மழைநீரில் மூழ்கிய நெற்பயிர்கள் குறித்து, வேளாண் துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் இப்பகுதியில் நேரில் ஆய்வு செய்ய வேண்டும்.பாதித்த பயிர்களுக்கு நிவாரணம் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.