14ஐ மணந்த 16 வயது சிறுவன் சமூக வலைத்தளத்தால் விபரீதம்
காஞ்சிபுரம், திருப்பூர் மாவட்டம், ஆலங்காடு பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி, பெற்றோர் இறந்துவிட்ட நிலையில், தாத்தா உடன் வசித்து வந்தார்.இவர், 'இன்ஸ்டாகிராம்' சமூக வலைதளம் வாயிலாக காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, கடந்தாண்டு பிப்ரவரி மாதம், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தன் வீட்டிலிருந்து வெளியேறிய சிறுமி, காஞ்சிபுரத்திற்கு வந்துள்ளார்.அங்கு, 2024ம் ஆண்டு, பிப்.,14ம் தேதி, இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.அதைத் தொடர்ந்து, தன் தாத்தாவுக்கு உடல் நிலை சரியில்லை என்ற தகவல் சிறுமிக்கு தெரிய வந்துள்ளது. இதையடுத்து, மார்ச் மாதம் தாத்தாவை சந்திக்க சிறுமி, திருப்பூர் சென்றுள்ளார்.அப்போது, சிறுமிக்கு திருமணமானது தெரியவந்தது. இது தொடர்பாக, திருப்பூர் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் நாகராஜன் அளித்த புகாரின்படி, திருப்பூர் மாவட்ட மகளிர் காவல் நிலைய போலீசார், 'போக்சோ' சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தனர்.இதையடுத்து, திருப்பூரில் இது சம்பந்தமான விசாரணை முடிந்து, இவ்வழக்கை காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு மாற்றியுள்ளனர்.காஞ்சிபுரத்தில் திருமணம் நடந்ததால், இவ்வழக்கு காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பதிவு செய்துள்ளனர்.