காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், 31.25 கோடி ரூபாய், நுாறு நாள் வேலைக்கு, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதில், 291 இடங்களில் புதிய குளம் மற்றும், 2.70 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட உள்ளன.காஞ்சிபுரம் மாவட்டத்தில், காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர் ஆகிய ஐந்து ஊராட்சி ஒன்றியங்களில், 274 ஊராட்சிகள் உள்ளன.இந்த ஊராட்சிகளில், மத்திய அரசு மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் செயல்படுத்தி வருகிறது. இதில், 1.28 லட்சம் குடும்பங்களில், 1.98 லட்சம் பேர், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின்கீழ் பதிவு செய்துள்ளனர். இதில், 1.45 லட்சம் பேருக்கு, 100 நாள் வேலைக்குரிய வருகை பதிவேடு புத்தகங்கள் வழங்கப்பட்டு உள்ளன.வாரத்திற்கு ஆறு நாட்கள் என, சுழற்சி முறையில், 100 நாள் பணியாளர்களுக்கு வேலை வழங்கப்படுகின்றன. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில், 40,918 பேர்களுக்கு, 100 நாள் வேலை வழங்கப்படுகின்றன.நுாறு நாள் பணியாளர்கள் வாயிலாக, மரக்கன்றுகளை உற்பத்தி செய்தல், மரக்கன்று நடுதல், ஏரி, குளங்கள் துார்வாருதல், கட்டடம், பாசன கால்வாய் தடுப்பணை, பல்வேறு அரசு அலுவலக கட்டடம் ஆகியவை கட்டுதல், பொது இடங்களில் குளங்களை வெட்டுதல், நீர் தேங்குமிடத்தில் சுற்றிலும் கற்கள் பதித்தல் ஆகிய பணிகளை செய்து வருகின்றனர்.இதுதவிர, விவசாயிகளின் நிலங்களில், தனி நபர்களுக்கு திறந்தவெளி கிணறு வெட்டி கொடுத்தல் ஆகிய பணிகளை செய்து வருகின்றனர்.அந்த வரிசையில், 2024- - 25ம் நிதி ஆண்டிற்கு, 274 ஊராட்சிகளில், 291 இடங்களில், புதிய குளங்கள் அமைக்கும் பணி செய்ய உள்ளனர். மேலும், 1,354 குக்கிராமங்களுக்கு தலா, 200 மரக்கன்றுகள் வீதம், 2.70 லட்சம் மரக்கன்றுகள் நட உள்ளன.அதேபோல, 456 இடங்களில் தனியார் விவசாய நிலங்களில், பண்ணை குட்டைகள் அமைக்கப்பட உள்ளன.இந்த, 100 நாள் பணிக்கு, 40.99 லட்சம் எண்ணிக்கையில், மனித சக்தி நாட்கள் பயன்படுத்தி வேலைகள் முடிக்க அதிகாரிகள் அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது. இதற்கு, காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு, 31.25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.குறிப்பாக, 100 நாள் வேலைக்கு கடந்த ஆண்டு, 293 ரூபாய் கூலியாக வழங்கப்பட்டது. நடப்பாண்டு, 319 ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது. இது, கடந்த ஆண்டைக் காட்டிலும், 56 ரூபாய் நடப்பாண்டிற்கு கூலி உயர்ந்துள்ளது.அதற்குகேற்ப, ஆக்கபூர்வமாக பணிகளை செய்து முடிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் இடையே கோரிக்கை எழுந்துள்ளது.இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்திற்கு, 40.99 லட்சம் மனித சக்தி நாட்களை பயன்படுத்தி புதிய குளம் வெட்டுதல், மரக்கன்றுகள் நடுதல் ஆகிய பணிகள் செய்யப்பட உள்ளன. இதுதவிர, கட்டுமானப் பொருட்களை பயன்படுத்தி செய்ய வேண்டிய வளர்ச்சி பணிகளுக்கு இன்னுமும் நிதி ஒதுக்கீடு பெறவில்லை. வந்தவுடன் வளர்ச்சிப் பணிகள் துவக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.