| ADDED : ஆக 07, 2024 02:47 AM
சென்னை, அம்பத்துார் அடுத்த கள்ளிக்குப்பத்தைச் சேர்ந்தவர் குணசேகரன், 57. பங்குச் சந்தை வணிகத்தில் ஈடுபட்டு வரும் இவர், கடந்த மாதம் ஆவடி மத்திய குற்றப் பிரிவில், புகார் ஒன்றை அளித்துள்ளார்.அந்த புகாரில் கூறியிருப்பதாவது:கடந்த ஓராண்டிற்கு முன், என் வாட்ஸாப் எண்ணிற்கு, 'ஆன்லைன் டிரேடிங்' குறித்து விளம்பரம் ஒன்று வந்தது..அந்த விளம்பரத்தில் இருந்த மொபைல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு பேசிய போது, ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு செய்தால், அதிக 'கமிஷன்' கிடைக்கும் என, மர்ம நபர்கள் ஆசை வார்த்தை கூறினர்.அதன்படி, மர்ம நபர்கள் கொடுத்த வங்கி கணக்குகளில், பல தவணைகளில், 1 கோடியே 20 லட்சத்து 21 ஆயிரம் ரூபாய் செலுத்தினேன். இந்நிலையில், எனக்கான கமிஷன் தொகையை வங்கி கணக்கில் இருந்து எடுக்க முயன்ற போது, வங்கி கணக்கை மர்ம நபர்கள் செயலிழக்க செய்தது தெரிந்தது.எனவே, மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு புகாரில் கூறியிருந்தார்.இது குறித்து விசாரித்த ஆவடி சைபர் கிரைம் போலீசார், சம்பவத்தில் ஈடுபட்ட திருவள்ளூர் மாவட்டம், மணவூரைச் சேர்ந்த கிரிதரன், 23, என்பவரை கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர்.