| ADDED : ஜூலை 22, 2024 11:41 PM
ஸ்ரீபெரும்புதுார் : ஸ்ரீபெரும்புதுார் -- திருவள்ளூர் சாலையில், ஸ்ரீபெரும்புதுார் பக்தவச்சலம் நகர் பகுதியில், நெடுஞ்சாலைத் துறை சார்பில் சிறு பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.இதனால், இந்த சாலையில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு, நெமிலி, மண்ணுார் வழியாக திருப்பி விடப்பட்டு, திருவள்ளூர் சென்று வருகின்றன.தற்போது, கட்டுமான பணிகள் பெருவாரியாக நிறைவடைந்த நிலையில், கார், பைக் மற்றும் இலகு ரக வாகனங்கள் மட்டும் இந்த சாலையில் சென்று வருகின்றன.இருப்பினும், சிறு பாலம் கட்டுமான பணி நடக்கும் பகுதியில் தடுப்பு இல்லை. இதனால், இந்த வழியே செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.குறிப்பாக, இரவு நேரங்களில் வரும் இருசக்கர வாகன ஓட்டிகள், எதிரே வரும் வாகனத்திற்கு வழிவிட ஒதுங்கும் போது, பாலம் அமைக்க தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து காயமடைகின்றனர்.எனவே, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், சிறுபாலம் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என. வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.