காஞ்சிபுரம் : காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் தமிழ்ப் புத்தாண்டையொட்டி நேற்று சிறப்பு அபிஷேகம் நடந்தது. பக்தர்கள் நீண்டவரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், தமிழ்ப் புத்தாண்டையொட்டி மூலவர் மற்றும் ஸ்ரீதேவி, பூதேவியுடன் உற்சவர் வரதராஜ பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், நேற்று 5:00 மணிக்கு விஸ்வரூப தரிசனம் மற்றும் விஷுக்கனி தரிசனம் நடந்தது. இரவு தங்க தேரோட்டம் நடந்தது. காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று காலை 5:00 மணிக்கு தமிழ்ப் புத்தாண்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, வள்ளி, தெய்வானையருடன் கேடயத்தில் எழுந்தருளிய முருகப்பெருமான் கோவில் உட்பிரகாரத்தில் உலா வந்தார்.காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் நேற்று, காலை 6:00 மணிக்கு புத்தாண்டு சிறப்பு அபிஷேகமும், தொடர்ந்து புத்தாண்டு சிறப்பு தரிசனம் நடந்தது.காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில், பிள்ளையார்பாளையம் ருத்ரகோடீஸ்வரர் கோவிலில் புத்தாண்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. கிளார் அகத்தீஸ்வரர், சின்ன காஞ்சிபுரம், திருக்கச்சியம்பதி விநாயகர் சந்தனகாப்பு அலங்காரத்தில், ரூபாய் நோட்டுகளால் மாலை அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். சின்ன காஞ்சிபுரம் கே.எம்.வி., நகர், விபூதி காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.உத்திரமேரூர் அடுத்த, பெருநகர் பட்டுவதனாம்பிகை உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் தமிழ்ப் புத்தாண்டு தினமான நேற்று, அதிகார நந்தி சேவை உற்சவம் நடந்தது. காலை, 6:00 மணிக்கு பிரம்மீச பெருமான் அதிகார நந்தி சேவையில் கோபுர தரிசனம் அளித்தார்.தொடர்ந்து, 400 சிவனடியார்கள் திருக்கயிலாய வாத்தியங்கள் இசைக்க, சிவ நடனம், சிலம்பாட்டம், குடை உற்சவம், புலி, மயில், மாடு, மரக்கால் ஆட்டம், ராஜமேளம், கட்டை கூத்துடன் அதிகார நந்தி வாகனத்தில் சுவாமி வீதியுலா வந்தார்.