| ADDED : மார் 23, 2024 01:03 AM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஆலந்துார், ஸ்ரீபெரும்புதுார், காஞ்சிபுரம், உத்திரமேரூர் ஆகிய நான்கு சட்டசபை தொகுதிகளில் பயன்படுத்த, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களுக்கான சுழற்சி முறை தேர்வு பணி, அரசியல் கட்சியினர் முன்னிலையில், கலெக்டர் கலைச்செல்வி தலைமையில் நேற்று நடந்தது. மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திர கிடங்கில் நடந்த இந்த சுழற்சி முறை, கணினி மூலம் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், தேர்தல் அதிகாரிகள் உடனிருந்தனர்.நான்கு சட்டசபை தொகுதியிலும் பயன்படுத்த உள்ள மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை கணினி மூலம் சுழற்சி மூலம் தேர்வு செய்வர். இதன் மூலம், ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், சீரற்ற முறையில் நான்கு சட்டசபை தொகுதிகளுக்கும் செல்லும். வெளிப்படை தன்மை காரணமாக, இந்த முறையை தேர்தல் கமிஷன் மேற்கொள்கிறது.சட்டசபை தொகுதி வாரியாக பட்டியலிடப்பட்ட, ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், வாகனங்களில் ஏற்றப்பட்டு, நான்கு சட்டசபை தொகுதியிலும் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டுள்ள கிடங்குகளில், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.