வாலாஜாபாத் அரசு அலுவலகங்களில் தண்ணீர் தட்டுப்பாடால் ஊழியர்கள் அவதி
வாலாஜாபாத்:வாலாஜாபாத் ரயில்வே மேம்பாலம் அடுத்த மின்வாரிய அலுவலகம் அருகே, கடந்த ஆண்டுகளில் வட்டார வளர்ச்சி அலுவலகம் செயல்பட்டு வந்தது. பின், வாலாஜாபாத் பேருந்து நிலையம் அருகே மாற்றம் செய்யப்பட்டது.எனினும், பழைய வட்டார வளர்ச்சி அலுவலக கட்டட வளாகத்தில், வட்டார கல்வி அலுவலகம், சத்துணவு மைய அலுவலகம் மற்றும் வேளாண் உதவி இயக்குனர் அலுவலகம் போன்றவை தொடர்ந்து செயல்படுகின்றன. இந்நிலையில், இந்த அலுவலகங்களுக்கான குழாய் இணைப்புகளில், கடந்த சில மாதங்களாக தண்ணீர் வினியோகிக்காததால், அங்கு பணியாற்றும் ஊழியர்கள் பல்வேறு சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.இதுகுறித்து அரசு ஊழியர்கள் கூறியதாவது:இங்குள்ள அரசு கட்டட வளாகத்தில், பேரூராட்சி சார்பில் கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. கடந்த ஆண்டுகளில், இத்தொட்டியில் தண்ணீர் ஏற்றி, அதன் வாயிலாக அரசு அலுவலகங்களுக்கு தண்ணீர் வினியோகிக்கப்பட்டு வந்தது. அதன்பின், மின் மோட்டார் பழுது, கேபிள் ஒயர் திருட்டு போன்ற காரணங்களால், தண்ணீர் வினியோகம் தடைபட்டது.தற்போது, இப்பிரச்சினை தொடர்வதால், குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு தண்ணீரை விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை உள்ளது. எனவே, இப்பகுதியில் முறையாக தண்ணீர் வினியோகம் செய்ய சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.