| ADDED : மே 23, 2024 11:12 PM
காஞ்சிபுரம், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இதில், கருடசேவை உற்சவம் நேற்று முன்தினம் கோலாகலமாக நடந்தது.இந்த உற்சவத்தை முன்னிட்டு, பலரும் அன்னதானம், மோர், குளிர்பானம் போன்றவை பக்தர்களுக்கு வழங்கினர். இதனால், நகர் முழுதும் பிளாஸ்டிக் பைகள், பேப்பர் தட்டுகள், வாழை இலை, கோப்பைகள் என, குப்பை கூளங்களாக காட்சியளித்தன.காஞ்சிபுரம் மாநகராட்சி சுகாதாரப் பிரிவு சார்பில், உற்சவத்திற்கு முன்னாள் இரவே சுகாதார பணிகளை துவங்கி உள்ளனர். உற்சவம் நடந்த புதன்கிழமை நாள் முழுதும், குப்பை அகற்றும் பணியில், துப்புரவு பணியாளர்கள் ஈடுபட்டனர்.அன்றாடம் வீடுகளில் இருந்து, 80 - 100 டன் வரை குப்பை சேகரமாகும் எனவும், கருடசேவை அன்று 25 டன் குப்பை கூடுதலாக அகற்றப்பட்டு, நத்தப்பேட்டையில் சேர்க்கப்பட்டதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.நத்தப்பேட்டைக்கு கொண்டு செல்லப்பட்ட குப்பையை மட்கும் குப்பை, மட்காத குப்பையை 'பயோ மைனிங்' முறையில், 'பெல்ட்' கன்வேயரில் அனுப்பி தரம் பிரிக்கப்படும். மட்கும் குப்பையை உரமாகவும், மட்காத பிளாஸ்டி கழிவுகளை சிமென்ட் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் பாய்லருக்கும் அனுப்பப்படும்.