காஞ்சிபுரம், காஞ்சிபுரம் நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள், அன்றாடம் மின்சார ரயில்கள் வாயிலாக, செங்கல்பட்டு, சென்னை, அரக்கோணம் போன்ற வெளியூர்களுக்கு சென்று பணியாற்றுகின்றனர். சொந்த பணிகளுக்கும், மருத்துவமனைகளுக்கும், அலுவலகப் பணிக்கும், வியாபாரத்துக்கும் இந்த ரயில் சேவையை ஆயிரக்கணக்கானோர் பயன்படுத்துகின்றனர்.அவ்வாறு, காஞ்சிபுரம் சுற்றியுள்ள பகுதிகளில் வசிப்போருக்கு மிக முக்கியமாக உள்ள இந்த ரயில் சேவைகளில், பல்வேறு சேவை குறைபாடுகள் உள்ளதாக பயணியர் தெரிவிக்கின்றனர்.பிரச்னைகளை சரி செய்ய வேண்டும் என பயணியர் தரப்பில் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், அடிப்படையான சில பிரச்னைகள் கூட தீராமல் இருப்பதாக பயணியரும் புலம்பியவாறு பணிக்கு சென்று திரும்புகின்றனர்.தெற்கு ரயில்வேயில், சென்னை மண்டலம், காஞ்சிபுரத்தில் உள்ள ரயில் சேவையில் உள்ள பிரச்னைகளை கண்டுகொள்ளவில்லை என பயணியர் குற்றஞ்சாட்டுகின்றனர்.காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையத்தில் முன்பதிவு மையம் இயங்குகிறது. ஆனால், காலை 8:00 மணி முதல், மதியம் 2:00 மணி வரை முன்பதிவு மையம் இயங்குகிறது. அவற்றை, இரவு 8:00 மணி வரை நீட்டிக்க வேண்டும்.காஞ்சிபுரம் அடுத்த, கூரம் கேட் பகுதியில், 25 ஆண்டுகளுக்கு முன், ரயில் நிலையம் இருந்துள்ளது. அதன்பின், ரயில் நிலையம் அகற்றப்பட்டுள்ளது. சுற்றியுள்ள கிராம மக்கள் பயன்பெறும் வகையில், கூரம் கேட்டில், மீண்டும் ரயில் நிலையம் அமைக்க வேண்டும்.காஞ்சிபுரம் புதிய பழைய ரயில் நிலையங்களில் கழிப்பறை வசதி இருந்தும், பயணியர் பயன்படுத்தும் வகையில், திறந்து வைப்பது இல்லை. பழைய ரயில் நிலையத்தில் கூரைகூட இல்லை. பயணியர் வெயிலில் நிற்க வேண்டியுள்ளது. பல ஆண்டுகளாகவே மேற்கூரை அமைக்கப்படாமல் உள்ளது.சென்னை - காட்பாடி மற்றும் சென்னை - புதுச்சேரி இடையே கழிப்பறை வசதியுடன், 'மெமோ' ரயில் இயக்கப்படுகிறது. குறைந்த மற்றும் நடுத்தர துாரம் பயணம் செய்யும் ரயிலே 'மெமோ' ரயில் என்பதாகும். ஆனால், அரக்கோணத்திலிருந்து சென்னை கடற்கரை இடையேயான 120 கி.மீ.,துாரம் இயக்கப்படும் ரயில்கள் சாதாரண மின்சார ரயில்களாக இயக்கப்படுகின்றன. அரக்கோணம் - சென்னை இடையேயான மின்சார ரயில்களை, கழிப்பறை வசதியுடைய மெமோ ரயில்களாக இயக்க வேண்டும்.புதிய ரயில் நிலையத்தில், கடவுபாதை கீழே, சுரங்கபாதை அமைக்கும் பணிகள் இரு ஆண்டாகவே கிடப்பில் போடப்பட்டுள்ளது. பணிகள் முடியாததால், அருகில் உள்ள இந்திரா நகர் மக்கள் மேம்பாலத்தை சுற்றி செல்கின்றனர். சுரங்கபாதை பணிகளை எப்போது முடிப்பார்கள் என இந்திரா நகர் குடியிருப்புவாசிகள் புலம்பி வருகின்றனர்.