காஞ்சிபுரம்,சென்னையின் இரண்டாவது விமான நிலையம், காஞ்சிபுரம் மாவட்டத்தில், பரந்துார் மற்றும் அதைச் சுற்றியுள்ள 19 கிராமங்களில், 5,400 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ளது.இதற்கு தேவைப்படும் மொத்தம், 5,400 ஏக்கர் நிலத்தில், 3,750 ஏக்கர் நிலம் தனியார் வசம் உள்ளன. பரந்துார் விமான நிலைய திட்ட நிர்வாகப் பணிகளை மேற்கொள்ளும் முகமையாக, 'டிட்கோ' என, அழைக்கப்படும், தமிழக தொழில் வளர்ச்சி நிறுவனம் உள்ளது. நில எடுப்பு பணிகளை வருவாய்த் துறை மேற்கொள்கிறது.பரந்துார் புதிய விமான நிலைய திட்டத்தை எதிர்த்து, 700 நாட்களுக்கும் மேலாக ஏகனாபுரம் கிராமத்தினர் தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்நிலையில், பரந்துார், தண்டலம், நெல்வாய், ஏகனாபுரம் மற்றும் மகாதேவிமங்கலம் ஆகிய ஐந்து கிராமங்களில் நில எடுப்பில் பாதிக்கப்படும், 1,060 குடும்பங்களுக்கு மறுகுடியமர்வு செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.இதற்காக, சிறுவள்ளூர், மடப்புரம், மதுரமங்கலம் மற்றும் மகாதேவிமங்கலம் ஆகிய கிராமங்களில் 238.7 ஏக்கர் பரப்பு நில எடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.மறுகுடியமர்வு செய்யப்பட உள்ள கிராமங்களை, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி நேற்று பார்வையிட்டார். அப்போது, காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி.,சண்முகம், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், நில எடுப்பு மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், கோட்டாட்சியர் சரவணகண்ணன் உட்பட பலர் உடனிருந்தனர்.